அரசு வேலை, இலவச பட்டா அஜித்குமார் தம்பி அதிருப்தி
அரசு வேலை, இலவச பட்டா அஜித்குமார் தம்பி அதிருப்தி
ADDED : ஜூலை 09, 2025 05:27 AM

திருப்புவனம் : மடப்புரம் கோவில் காவலாளியின் தம்பி, அரசு வழங்கிய பணி, இலவச பட்டா குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின் போது இறந்த பத்ரகாளியம்மன் கோவில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு, வழங்கப்பட்ட ஏனாதி இடத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, நேற்று ஆய்வு செய்தார்.
அஜித்குமார் தாய் மாலதிக்கு, ஜூலை, 2ல் ஆறுதல் தெரிவிக்க வந்த அமைச்சர் பெரியகருப்பன், ஏனாதியில் மூன்று சென்ட் நிலமும், சகோதரர் நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் அரசு பணி ஆணையும் வழங்கினார்.
நேற்று மதுரை ஐகோர்ட்டில் அஜித்குமார் தம்பி நவீன்குமார், ''வீட்டுமனை வீட்டில் இருந்து ஆறு கி.மீ., தள்ளி கருவேல மர காட்டினுள் இருப்பதாகவும், 80 கி.மீ., துாரமுள்ள காரைக்குடியில் பணி வழங்கி இருக்கிறது,'' என, அதிருப்தி தெரிவித்தார்.
இதையடுத்து ஏனாதி இடத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி நேற்று ஆய்வு செய்தார். தாசில்தார் விஜயகுமார், வருவாய் அதிகாரிகள் உடன் சென்றனர்.

