ADDED : மார் 10, 2024 01:52 AM
சென்னை:சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித், அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் அஜித், 52. தற்போது, விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு, அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து, கடந்த மாதம் சென்னை வந்த அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக மீண்டும், அந்நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
முழு உடல் பரிசோதனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ள அஜித், கடந்த, 6ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், முழு உடற்பரிசோதனை செய்தார்.
பரிசோதனையில், காதுக்கு கீழே உள்ள நரம்பில் சிறிய வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மறுநாள் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று அதிகாலையில், அஜித் வீடு திரும்பினார். டாக்டர்களின் ஆலோசனைப்படி, சில தினங்களுக்கு வீட்டில் ஓய்வெடுத்த பின், படப்பிடிப்புக்கு செல்ல உள்ளார்.

