ADDED : அக் 06, 2025 02:11 AM

கள்ளக்குறிச்சி: என்.டி.ஏ., தேர்வில் கள்ளக் குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளதாக பள்ளி நிர்வாக இயக்குநர் ராஜே ந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
இந்திய ராணுவம், கடற்படை, வான்படை ஆகியவற்றில் உயர் அதிகாரிகளாக உருவாக விரும்பும் மாணவர்களுக்காக யு.பி.எஸ்.சி., ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பு அகாடமி (என்.டி.ஏ.,) தேர்வு நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.
இத்தேர்வுக்காக ஏ.கே.டி பள்ளி ராணுவ சேர்க்கை ஆயத்தப் பிரிவு (டி.எஸ்.பி.ஏ.,) மாணவர்கள், கடந்த இரு ஆண்டுகளாக சிறப்பு பயிற்சி பெற்று பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் கடந்த 1ம் தேதி வெளியானது.
அதில் சென்னையை சேர்ந்த யுகேந்திரா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மொகித்ஜாக்ரா ஆகியோர் தேர்வாகி ஏ.கே.டி., பள்ளிக்கு வரலாற்று வெற்றியை பெற்று தந்துள்ளனர்.
பெரும்பாலான பெற்றோர்கள் மருத்துவம், பொறியியல் படிப்புகளையே அதிகம் தேர்வு செய்கின்றனர். ராணுவத்தில் உயர் அதிகாரி குறித்த விழிப்புணர்வு சற்று குறைவாக உள்ளது.
அதற்காகவே சென்னை டி.ஏ.வி., பள்ளிகள் மற்றும் திருச்சி எஸ்.எஸ்.வி.எஸ்., அமைப்புகளுடன் இணைந்து ராணுவ சேர்க்கை ஆயத்தப் பிரிவை துவக்கினோம். சைனிக் பள்ளியில் சேர்க்கை கிடைக்காத மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக விளங்குகிறது.
இப்பிரிவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவர்கள் சேர்க்கை பெற்று பயின்று வருகின்றனர். சி.பி.எஸ்.சி., பாடத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த முறையில் என்.டி.ஏ., பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக பிரத்யேக பயிற்சி மைதானம் அமைத்து நேர்த்தியான செயல் திட்டத்துடன் முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை டி.ஏ.வி., பள்ளிகள் வழிகாட்டுதல் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் பாபு, பள்ளி முதல்வர் சாமுவேல் சீலன், டி.எஸ்.பி.ஏ., இயக்குனர் ஜெயமுருகன் ஆகியோரின் அனுபவம், திறமையான பயிற்சி மற்றும் மாணவர்கள், பெற்றோர் உறுதுணையால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.
இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.