செல்வப்பெருந்தகைக்கு எதிராக மூவரணி கோஷ்டிகளை ஒருங்கிணைக்கும் அழகிரி
செல்வப்பெருந்தகைக்கு எதிராக மூவரணி கோஷ்டிகளை ஒருங்கிணைக்கும் அழகிரி
UPDATED : ஏப் 19, 2025 02:44 AM
ADDED : ஏப் 18, 2025 07:42 PM

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் எதிர்கோஷ்டிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், முன்னாள் தலைவர் அழகிரி தலைமையில் 'மூவரணி' உதயமாகியுள்ளது.
தமிழக காங்கிரசை சீரமைக்கும் வகையில், 3 லோக்சபா தொகுதிகளுக்கு ஒருவர் வீதம், 13 ஒருங்கிணைப்பாளர்களையும், 39 அமைப்பாளர்களையும், செல்வப்பெருந்தகை நியமித்துள்ளார். இதில், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இளையவர்கள் நியமிக்கப்பட்டதால், அவர்களின் கீழ் மூத்த நிர்வாகிகள், அமைப்பாளர்களாக பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு அதிருப்தி வட்டம் உருவாகி உள்ளது.
இதற்கிடையில், கட்சி நிர்வாகத்தை கட்டமைக்கும் வகையில், புதிய பொறுப்புகளை ஏற்க விரும்புவோரிடம் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக விருப்பத்தை பெறும் நடைமுறையை, செல்வப்பெருந்தகை அறிமுகப்படுத்தினார். இதற்கு மாவட்ட தலைவர்களிடம் எதிர்ப்பு எழுந்து, செல்வப்பெருந்தகை மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.
அதாவது, மாவட்டத் தலைவர்களின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், மாநில தலைமையே நேரடியாக அனைத்து முடிவுகளையும் எடுக்க முயல்வதாக, அதிருப்தி மாவட்டத் தலைவர்கள் புகார் கூறினர்.
'கட்சி தொடர்பான விஷயங்களில், செல்வப்பெருந்தகை தன்னிச்சையாக செயல்படுகிறார். மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய தலைவர்களிடம் கலந்தாலோசிக்காமல் செயல்படுகிறார்' என, டில்லி மேலிடத்தில், மாவட்டத் தலைவர்கள் முறையிட்டனர்.
இதற்கு செல்வப்பெருந்தகை தரப்பில், பதில் அளிக்கப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, சென்னை சத்தியமூர்த்தி பவனில், அம்பேக்தகர் பிறந்த நாள் விழா, செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது. அதை புறக்கணித்த அதிருப்தி மாவட்ட தலைவர்கள், அதே நாளில் சென்னையில் துறைமுகம், அயனாவரம் பகுதிகளில் தனி விழா நடத்தினர். அதற்கு செல்வப்பெருந்தகையை அழைக்காமல், எதிர்க்கோஷ்டிகளான திருநாவுக்கரசர், அழகிரியை அழைத்து, தங்கள் பலத்தை காட்டினர்.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகம் முழுதும், கட்சியின் முன்னாள் தலைவர் அழகிரி ஆதரவு மாவட்டத் தலைவர்கள், 35க்கும் மேற்பட்டோர் உள்ளனர்; 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். சிதம்பரம், தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர், செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக உள்ளனர்.
எனவே, அகில இந்திய காங்கிரஸ் செயலர் மாணிக்தாகூர், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரை இணைத்து, செல்வப்பெருந்ததைக்கு எதிராக, மூவரணியை அழகிரி துவக்கியுள்ளார். முதல் கட்டமாக, சென்னை அயானாவரத்தில், கட்சி பிரமுகர் சரவணன் ஏற்பாட்டில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில், பல்வேறு நலத் திட்டங்களை அழகிரி வழங்கினார்.
அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, செல்வப்பெருந்தகைக்கு எதிரான அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து செயல்பட, அழகிரி தலைமையிலான மூவரணி திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -