ADDED : டிச 27, 2024 05:11 AM

சென்னை: மருதமலை சுப்பிரமணியசுவாமி மற்றும் மதுரை கள்ளழகர் கோவில் ஆகியவற்றில், நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
ஹிந்து அறநிலையத் துறை கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஆகியவற்றில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்தது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், திருச்செந்துார், சமயபுரம், திருத்தணி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை, திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம், விழுப்புரம் மேல்மலையனுார், கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவில்களுக்கு, இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து, மதுரை மாவட்டம் கள்ளழகர், கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணியசாமி கோவில்களுக்கும், இத்திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், நேற்று துவக்கி வைத்தார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள, 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லுாரி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார். அப்போது, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலர் முருகானந்தம், அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

