நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர் சேவைகள் பாதிப்பு
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர் சேவைகள் பாதிப்பு
ADDED : ஜன 27, 2026 06:50 PM

சென்னை: வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு முழுதும் உள்ள அரசு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், வாடிக்கையாளர் சேவைகள் பாதிக்கப்பட்டன.
வங்கி ஊழியர்களுக்கு மாதத்தின், 2வது, 4வது சனிக் கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. அதில் மீதமுள்ள, இரண்டு சனிக்கிழமையும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்; வாரத்தில் ஐந்து நாள்கள் வேலை என்ற முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை வலியுறுத்தி, அனைத்து வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில், சென்னை, பிராட்வே, பிரகாசம் சாலையில் உள்ள யூனியன் வங்கி தலைமை அலுவலகத்தில், அச்சங்கத்தின் பொதுச்செயலர் வெங்கடாசலம் தலைமையில், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பொது மக்களின் வங்கி சேவைகளான, பணப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன.
அனைத்து வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் வெங்கடாசலம் அளித்த பேட்டி:
நாடு முழுதும் உள்ள வங்கி ஊழியர்கள், பல ஆண்டுகளாக, திங்கள் முதல் வெள்ளி வரை முழு நாளும், சனிக்கிழமை அரை நாளும் பணிபுரிந்தனர். இதன்பின் மாதத்தில், 2வது, 4வது சனிக்கிழமைகள் விடுமுறையாகவும், மற்ற இரண்டு சனிக்கிழமைகள் முழு வேலை நாளாகவும் மாற்றப்பட்டன.
உலக நாடுகள் மற்றும் இந்தியாவின் பல துறைகளில், வாரத்தில் ஐந்து நாள்கள் வேலை என்ற முறை இருப்பதால், நிர்வாகத்துடன் பேச்சு நடந்தது. அப்போது, வாடிக்கையாளர் சேவை நேரம் குறையும் என்பதால், திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி, 40 நிமிடங்கள் கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க, வங்கி ஊழியர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், மத்திய அரசு, இதை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளது.
ரிசர்வ் வங்கி, எல்.ஐ.சி., மத்திய - மாநில அரசின் பல துறைகளில், ஐந்து நாள் வேலை முறை அமலில் உள்ளது. அதேபோல் வங்கி ஊழியர்களுக்கும், அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராமப்புற கூட்டுறவு வங்கிகளை சேர்ந்த, 8 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே, ஜன., 24, 25, 26, ஆகிய மூன்று நாட்கள் தொடர் வங்கி விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதே நேரத்தில், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 'ஆன்லைன்' பரிவர்த்தனையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

