UPDATED : நவ 14, 2024 12:31 AM
ADDED : நவ 14, 2024 12:13 AM

சென்னை: சென்னையில் அரசு மருத்துவமனையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சிகிச்சையை தவிர்த்து, மற்ற சேவைகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை தலைவர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தினார். காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
ஆர்ப்பாட்டம்
சம்பவத்தை கண்டித்து, அரசு டாக்டர்களுக்கான அனைத்து சங்கங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தன. மருத்துமவனை வளாகங்களில் டாக்டர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போராட்டம் அறிவித்த சங்க நிர்வாகிகளுடன், நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு நடத்தினார். அவர்கள் தனித்தனியாக கோரிக்கைகளை கூறினர். அவற்றை நிறைவேற்றுவதாக, அமைச்சர் உறுதி அளித்தார்.
அதையடுத்து, அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு சங்கம், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. ஆனால், அரசு டாக்டர்கள் சங்கத்தினர், போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறியதாவது:
மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் மற்றும் பி.என்.எஸ்., எனும் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில், புறக்காவல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.
நோயாளியுடன் வருவோருக்கு, 'உதவியாளர் பாஸ்' வழங்கி, வார்டுக்குள் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசரகால சேவை மற்றும் உயிர் காக்கும் நடைமுறைகள் தவிர, அனைத்து புறநோயாளிகள், திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள், கூட்டங்கள், மாணவர்களின் வகுப்புகள் ஆகியவை புறக்கணிக்கப்படும்.
போராட்டம் தொடரும்
கோரிக்கைகளை ஏற்பதாக அமைச்சர் கூறினார். ஆனால், ஒவ்வொரு முறையும் அப்படி சொல்லி விட்டு, கிடப்பில் போடுவதே வாடிக்கை. எனவே, இம்முறை கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு செந்தில் கூறினார்.
அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க செயலர் ராமலிங்கம் கூறியதாவது:
கோரிக்கையை ஏற்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். எனவே, மக்கள் பாதிக்கப்படாதவாறு சேவையை தொடர்கிறோம். அடையாள தர்ணா மற்றும் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மருத்துவ சேவையை தவிர, வகுப்புகள், கூட்டங்கள் போன்றவற்றை, அடுத்த மூன்று நாட்களுக்கு புறக்கணிக்கிறோம்.
இவ்வாறு ராமலிங்கம் கூறினார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை தலைவர் அபுல் ஹசன் கூறுகையில், ''இன்று மாலை 6:00 மணி வரை, எங்கள் சங்கத்தின், 45,000 டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர். அவசர சிகிச்சையை தவிர, மற்ற சேவைகளான தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் புறக்கணிக்கப்படும்,'' என்றார்.
அவசர நடவடிக்கை அவசியம்!
டாக்டர் பாலாஜி ஜெகநாதன் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதுடன், வன்மையாக கண்டிக்கத்தக்கது. டாக்டர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்க முடியாதது. டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரின் பாதுகாப்பை, குறிப்பாக மருத்துவமனைகளில் உறுதிப்படுத்த, அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம். டாக்டர் பாலாஜி விரைவாக உடல் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
- கவர்னர் ரவி
கொடுமையிலும் கொடுமை
கடலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சமூக முன்னேற்ற சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசத்தின் தந்தையை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:சென்னை மருத்துவமனையில் அரசு டாக்டர் தாக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமை. இதுபோன்ற நிகழ்வு நடக்கக் கூடாது. டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளுக்கு மாணவ - மாணவியரை ஈடுபடுத்தக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் நலம் விசாரிப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
சர்வதேச தரத்தில் சிகிச்சை
பிரேமா புற்றுநோய் முற்றிய நிலையில் தான் மருத்துமவனைக்கு வந்தார். சர்வதேச தரத்திலான சிகிச்சை அளித்தோம். புற்றுநோயின் ஐந்தாவது கட்டம் என்பதால், அவரை காப்பாற்றுவது கடினம். இருக்கும் வரை, வலி இல்லாமல் வாழ தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கேன்சர் பரவி இருந்ததால் நுரையீரல் பகுதி அகற்றப்பட்டது. சிகிச்சையில் தவறும் இல்லை; தாமதமும் இல்லை.
--பார்த்தசாரதி
கிண்டி மருத்துவமனை இயக்குனர்