அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை: கார்த்தி எம்.பி., பேட்டி
அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை: கார்த்தி எம்.பி., பேட்டி
ADDED : நவ 02, 2025 10:53 PM
சிவகங்கை:  ''உச்சநீதிமன்றம் தெரிவித்த பிறகு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் சிறப்பு வாக்காளர் திருத்த பணியை நிறுத்திட முடியாது,'' என, சிவகங்கையில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தேர்தல் கமிஷன் நடத்துகிறது. அதில் கடந்த தேர்தலில் ஓட்டளித்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்காமல் நீக்க கூடாது. புதிய வாக்காளர்களையும் நன்கு விசாரித்து சேர்க்க வேண்டும்.
வெளிமாநிலத்தில் இருந்து தற்காலிகமாக வந்தவர்களை சேர்க்க கூடாது. அப்படி சேர்த்தால் மாநிலத்தின் தன்மை மாறிவிடும்.
சிறப்பு வாக்காளர் திருத்த பணியை மாநில எல்லையோர மற்றும் சிறுபான்மையினரை அச்சுறுத்தவும் பயன்படுத்துகின்றனர். உச்சநீதிமன்றம் தெரிவித்த பிறகு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் சிறப்பு வாக்காளர் திருத்த பணியை நிறுத்த முடியாது.
வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியினரும் அமைச்சரைவையில் பங்கு வகிக்க வேண்டும் என்ற ஆசை காங்., கட்சிக்கு உண்டு. ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் கூட்டணி கட்சிக்கு அமைச்சரவையில் இடமளிக்கும் ஆந்திர அரசின் மாடல், தமிழகத்திற்கும் பொருந்தும்.
கரூர் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம், நிகழ்ச்சி நடத்தியோருக்கு பொறுப்பு உண்டு. தனி ஒருவர் இதற்கு காரணமல்ல. சசிகலா, பன்னீர் செல்வம், செங்கோட்டையன், தினகரன் இணைந்திருப்பது தேர்தலில் எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவில்லை. ஆனால் அ.தி.மு.க.,வில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து செல்வதும், பா.ஜ., உடன் கூட்டணி சேர்ந்ததும் அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

