UPDATED : ஜன 10, 2024 10:31 AM
ADDED : ஜன 09, 2024 11:53 PM

சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
இதற்காக 238.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை, ஜன., 2ல் வெளியிடப்பட்டது. அதில் ரொக்கப் பரிசு குறித்து, எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது விவாதத்தை கிளப்பியது. 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு அவசியம் என, எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன.
அதையடுத்து, 5ம் தேதி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், 'மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை கார்டுதாரர்கள், பொருளில்லா கார்டுதாரர்கள் தவிர்த்து, ஏனைய அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படும்' என கூறப்பட்டது.இது மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களிடம் பாரபட்சம் காட்டுவதாக, அரசுக்கு எதிரான கருத்துக்கள், வலைதளங்களில் பகிரப்பட்டன.
அரசு ஊழியர்களும், வருமான வரி செலுத்துவோரும் அதிருப்தி அடைந்தனர். இந்த அதிருப்தி லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என தி.மு.க நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் முதல்வரிடம் முறையிட்டனர். அவரும் அதை ஏற்று, ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் உண்டு என நேற்று அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பை அதிகாரபூர்வ செய்திக்குறிப்பாக அரசு வெளியிடவில்லை.கார்டு வைத்திருக்கும் அனைவரும் 'நமக்கும் 1,000 ரூபாய் கிடைக்கும்' என்று மகிழ்ச்சி அடைந்த சூழ்நிலையில், ”அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கிடையாது; அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டுமே 1000 வழங்கப்படும்” என்று அதிகாரிகள் அவசர விளக்கம் அளித்தனர்.
இந்த விளக்கம் மக்களின் அதிருப்திக்கு உரமிட்ட நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் இன்று துவக்கி வைத்தார்.
மொத்த கார்டுதாரர்கள் -2.24 கோடி
அரிசி கார்டுகள் -2.20 கோடி
சர்க்கரை கார்டுகள் -4 லட்சம்
பொருளில்லா கார்டுகள்- 62,000

