ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி: கிருஷ்ணசாமி
ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி: கிருஷ்ணசாமி
ADDED : ஏப் 17, 2025 09:56 PM
சென்னை:''ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே, புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும்,'' என, அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அவரது பேட்டி:
நாட்டின் பூர்வீக குடிமக்கள், விளிம்புநிலை மக்கள், அரசியல் அதிகாரத்திற்கு வர முடியவில்லை. அரசியல் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காகவே, புதிய தமிழகம் கட்சியை துவக்கினோம். எனவே, 2026 சட்டசபை தேர்தலில், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதுதான், புதிய தமிழகத்தின் முழக்கமாக இருக்கும்.
எனவே, ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தோடு, யார் கூட்டணி அமைக்கின்றனரோ, அவர்களுக்கே முன்னுரிமை அளிப்போம். ஆட்சியில் பங்கு என்பதே கூட்டணிக்கான நிபந்தனையாக இருக்கும். அதை அடிப்படையாக வைத்தே, 2026ல் கூட்டணி அமைப்போம்.
இந்த ஆட்சியை மாற்றி விட்டு, இன்னொரு தனி கட்சியை ஆட்சியில் அமர்த்த பாடுபட மாட்டோம். தமிழகத்தில் அனைத்து சமுதாயத்திற்கும் அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வர வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், த.வெ.க., தலைவர் விஜயும் கூட்டணி ஆட்சி பற்றி பேசியுள்ளனர். இதை வரவேற்கிறேன். யார் யாரெல்லாம் கூட்டணி ஆட்சி பற்றி பேசுகின்றனர் என பார்த்து, அவர்களின் வலிமையை ஆராய்ந்து, கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்வோம். கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை தவிர, வேறு எதைப் பற்றியும் நாங்கள் சிந்திக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.