234 தொகுதிகளிலும் கூட்டணிக்கு வெற்றி; சொல்றது யாருன்னு பாருங்க!
234 தொகுதிகளிலும் கூட்டணிக்கு வெற்றி; சொல்றது யாருன்னு பாருங்க!
ADDED : நவ 10, 2024 02:23 PM

சென்னை: 'அ.தி.மு.க.,வுடன் நட்புறவுடன் நாங்கள் தொடர்கிறோம். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்' என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பிரேமலதா கூறியதாவது: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, முன்னிட்டு மாபெரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் தேர்தல்களுக்கான பணிகளை இப்போதை துவக்கிவிட்டோம். 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து இன்று முதல் பணிகளை துவங்கி இருக்கிறோம். அ.தி.மு.க.,வுடன் நட்புறவுடன் நாங்கள் தொடர்கிறோம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எங்களுடைய ஒற்றுமை, நட்புணர்வுடன் சிறப்பாக உள்ளது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் பல்வேறு துறை அரசு ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜயை காணவில்லை
வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் அவர்கள் ஆர்பாட்டம் செய்ய அவசியம் இல்லை. அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். உண்மை நிலவரம் களத்தில் ஆர்பாட்டம் நடத்துபவர்களிடம் கேட்கும் போது தான் தெரிகிறது. விஜய் குறித்த நிலைப்பாடுகளை அவரிடம் தான் கேட்க வேண்டும். மாநாடு நடத்திய பிறகு விஜயை பொது வெளியில் யாரும் சந்திக்கவில்லை. நீங்கள் விஜயை செய்தியாளர்களை சந்திக்க வைத்து கேள்வி கேட்க வேண்டும். விஜயின் கட்சி கொள்கை, கூட்டணி வியூகங்கள் பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.
234 தொகுதிகளில் வெற்றி
234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இதற்கான பணி இன்று முதலே துவங்கி இருக்கிறோம். விஜயபிரபாகரன் உட்பட மூத்த நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்குவது குறித்து அறிவிக்க உள்ளோம். ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை. அனைத்து மாவட்டங்களின் சாலைகளும் எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.
வாய் சவடால்
அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாய் சவடால் விட்டு கொண்டு, அதிகாரம் பவரை வைத்து கொண்டு மாயை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். அவங்க கூட்டணியில் பல குளறுபடிகள். 2026ம் ஆண்டு கூட்டணி தொடருமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. முதல்வர், துணை முதல்வர் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.