ADDED : மார் 19, 2024 12:31 AM
திண்டிவனம் : அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் இருந்த பா.ம.க., திடீரென பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலர் வடிவேல் ராவணன் அறிவித்தார்.
நேற்று மாலை 4:30 மணிக்கு தைலாபுரத்தில், பா.ம.க., நிர்வாக குழு கூட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து, கட்சியின் மாவட்ட செயலர்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
இவ்விரு கூட்டங்களிலும், லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி என்பதை நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். ஆனாலும், கூட்டணி குறித்து முறையாக அறிவிக்கப்படவில்லை.
இரவு 7:00 மணிக்கு வெளியே வந்த கட்சியின் பொதுச்செயலர் வடிவேல் ராவணன் நிருபர்களிடம் கூறுகையில், ''பா.ஜ.,வுடன் பா.ம.க., கூட்டணி அமைத்து போட்டியிடுவது என ராமதாஸ் முடிவு எடுத்துள்ளார்.
''தொகுதி மற்றும் பா.ம.க., போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பார்,'' என்றார்.
