மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கு தேவையான மின்சாரம் வாங்க வாரியத்திற்கு அனுமதி
மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கு தேவையான மின்சாரம் வாங்க வாரியத்திற்கு அனுமதி
ADDED : பிப் 18, 2025 03:36 AM
சென்னை : கோடை கால மின் தேவையை பூர்த்தி செய்ய, வரும் மார்ச்சில், 18 மணி நேரத்திற்கு, 750 மெகாவாட்டும், மாலை முதல் நள்ளிரவு வரை ஆறு மணி நேரத்திற்கு, 1,575 மெகா வாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ளது. இதை பூர்த்தி செய்யும் அளவுக்கு வாரிய மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்து, மின்சாரம் வாங்கப்படுகிறது. இது தவிர, அவசர தேவைக்கு குறுகிய கால கொள்முதலாகவும், மின்சார சந்தையிலும் வாங்கப்படுகிறது.
கடந்த, 2024 கோடையில் மே, 2ல் மின் தேவை, 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவு.
இந்தாண்டு கோடையில் மின் தேவை, 22,000 மெகா வாட்டை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, குறுகிய கால மின் கொள்முதல் செய்வதற்கு ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் அனுமதி கேட்டது. அதன் அடிப்படையில், வரும் மார்ச்சில் நள்ளிரவு, 12:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, 750 மெகா வாட்; மாலை 6:00 மணி முதல், 12:00 வரை, 1,575 மெகா வாட் மின்சாரம் வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
வரும் ஏப்ரலில் நள்ளிரவு, 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, 1,200 மெகா வாட்; மாலை 6:00 மணி முதல், 12:00 வரை, 2,340 மெகா வாட்; மே மாதம் நள்ளிரவு, 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, 600 மெகா வாட்; மாலை 6:00 மணி முதல், 12:00 வரை, 1,320 மெகா வாட் மின்சாரம் வாங்க, ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தனியார் நிறுவனங்களிடம் இருந்து குறுகிய கால மின் கொள்முதலுக்கு, டெண்டர் கோரப்பட்டுள்ளது; ஆணையம் அனுமதி அளித்ததால், டெண்டர் இறுதி செய்யப்பட்டு, மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

