அமரன் படத்தில் மாணவரின் செல்போன் எண்! ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டதால் நீக்கம்
அமரன் படத்தில் மாணவரின் செல்போன் எண்! ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டதால் நீக்கம்
ADDED : டிச 06, 2024 03:12 PM

சென்னை: அமரன் படத்தில் மாணவரின் செல்போன் எண், சாய் பல்லவியின் எண்ணாக காட்டப்பட்டதால் வழக்கு தொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டதால் அந்த எண் தற்போது நீக்கப்பட்டு உள்ளது.
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் அமரன். சிவ கார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நாயகி சாய் பல்லவி மொபைல் எண்ணாக ஒரு எண் காட்டப்பட்டது. நிஜத்தில் அதே எண் சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த கல்லூரி மாணவர் வாகீசன் என்பவரின் எண்ணாகும்.
தமது எண் திரைப்படத்தில் இடம்பெற்றதால் சாய் பல்லவியின் எண் என்று நினைத்து தினமும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் வருவதாகவும், பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தமக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார்.
ஒரு செல்போன் எண் பஞ்சாயத்து, கோர்ட் வரை போன நிலையில், பட தயாரிப்பு நிறுவனம் சர்ச்சைக்குள்ளான அந்த எண்ணை நீக்கிவிட்டதாக தெரிவித்தது. மேலும் காட்சி நீக்கப்பட்டது, குறித்து தணிக்கை குழுவிடம் புதிய சான்றிதழ் பெற்றுவிட்டதாகவும் கூறியது.
ரிட் வழக்கில் இழப்பீடு கோர முடியாது என்று கூறிய கோர்ட், வழக்கு விசாரணையை டிச.20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.