2வது முறையாக நிரம்பிய அமராவதி அணை; இரு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
2வது முறையாக நிரம்பிய அமராவதி அணை; இரு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : நவ 27, 2024 10:17 PM

உடுமலை; உடுமலை அமராவதி அணை நடப்பாண்டு, இரண்டாவது முறையாக நேற்று நிரம்பியதையடுத்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
நடப்பாண்டு, தென்மேற்கு பருவ மழையால், கடந்த, ஜூலை, 18ம் தேதி நிரம்பியது. தொடர்ந்து, இரு மாதம் வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டதோடு, இரு மாவட்டத்திலுள்ள பாசன நிலங்களுக்கும் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தலையாறு, மறையூர், கோவில் கடவு, வால்பாறை உள்ளிட்ட அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பெய்த கன மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்தது.
மழை தொடர்ந்து அதிகரித்து, அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்ததால், அணை பாதுகாப்பு கருதி, உபரி நீர் திறக்கும் வாய்ப்புள்ளதால், ஆற்றின் வழியோர கிராமங்களிலுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
நேற்று மதியம், 1:00 மணிக்கு, அணை நிரம்பியதால், உபரி நீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு இரண்டாவது முறையாக, அமராவதி அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அணை நீர்மட்டம்
நேற்று மதியம் 1:00 மணி நிலவரப்படி, அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், 88.19 அடி நீர்மட்டமும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,883.23 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 3,053 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து ஆறு மற்றும் பிரதான கால்வாயில், 3,300 கனஅடி நீர் திறக்கப்பட்டது.