அமாவாசை கேரக்டர் பழனிசாமி: செந்தில் பாலாஜி கடும் தாக்கு
அமாவாசை கேரக்டர் பழனிசாமி: செந்தில் பாலாஜி கடும் தாக்கு
ADDED : ஜன 20, 2025 06:26 AM

சென்னை : 'அமைதிப்படை படத்தில் வரும், அமாவாசை கேரக்டர்தான் பழனிசாமி. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23ம் புலிகேசி' என, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அமைதிப்படை படத்தில் வரும், அமாவாசை கேரக்டர் தான், பழனிசாமி. பலரை ஏறி மிதித்து பதவியை பிடித்தவர். இவர், தி.மு.க., ஆட்சிக்கு, இன்னும் 13 அமாவாசைகள் தான் உள்ளன என, நேற்று முன்தினம் பேசியுள்ளார். ஆட்சியை இழந்து, இந்த நான்கு ஆண்டுகளில் அமாவாசை என, உருட்டிக் கொண்டே அரசியல் செய்து வருகிறார்.
இவர், '2024ல் சட்டசபை தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதல்வராக இருப்பார். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும்' என, 2022 பிப்., 12ம் தேதி கூறினார்.
அடுத்து, 'இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே தி.மு.க., ஆட்சியில் இருக்கும்' என, 2024 ஜனவரியிலும், தி.மு.க., ஆட்சியின் ஆயுட்காலம் 19 அமாவாசைகள் தான், நாட்கள் எண்ணப்படுகின்றன என, செப்., மாதத்திலும் தெரிவித்தார்.
இப்படி, ஒவ்வொரு அமாவாசைக்கும் கணக்கு சொல்லி கொண்டிருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல், புறமுதுகிட்டு ஓடும் 23ம் புலிகேசிதான் பழனிசாமி. அமாவாசைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
இன்னும் நுாறு பௌர்ணமிக்கு ஸ்டாலினே முதல்வராக தொடர்வார் என்பதை, 2026ல் எதிர்கட்சித் தலைவர் உணர்ந்து கொள்வார்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.