தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட அம்பேத்கர் நுால்கள் வெளியீடு
தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட அம்பேத்கர் நுால்கள் வெளியீடு
ADDED : ஆக 14, 2025 03:26 AM

சென்னை:தமிழ் வளர்ச்சித் துறை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, அம்பேத்கரின் 17 நுால்கள் வெளியிடப்பட்டன.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் நுால்கள், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில், தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன. மொழி பெயர்ப்பு பணியில், பேராசிரியர்கள் செந்தலை கவுதமன், வீ.அரசு, வளர்மதி, மதிவாணன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், இதன் 10 தொகுதிகளை, கடந்த ஜன., 13ல் வெளியிட்டார். இது வரை, அவற்றின் 2,000 பிரதிகள் விற்பனையாகி, 14 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மொழி பெயர்ப்பின் இரண்டாம் கட்டமாக, 'தீண்டாமை; காங்கிரசும் காந்தியும், தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன' என்பது உட்பட, 17 நுால்கள் வெளியீட்டு விழா, நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.
நுால்களை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை செயலர் ராஜாராமன், இயக்குநர் அருள், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.