லட்சியம் இல்லாத கட்சி காங்கிரஸ் தி.மு.க., - எம்.பி., பேச்சால் சர்ச்சை
லட்சியம் இல்லாத கட்சி காங்கிரஸ் தி.மு.க., - எம்.பி., பேச்சால் சர்ச்சை
ADDED : ஜன 03, 2024 11:17 PM
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்து பேசிய தி.மு.க., -- எம்.பி., அப்துல்லாவின் சர்ச்சை பேச்சுக்கு, தமிழக காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சமூக வலைதளத்தில், அப்துல்லா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:
நாடு சுதந்திரம் அடைந்தபோது, ஐந்து இயக்கங்களும், சில கட்சிகளும் இருந்தன. இயக்கத்திற்கும், அரசியல் கட்சிக்கும் வேறுபாடு உண்டு. இயக்கத்திற்கு பெரிய லட்சியம் உண்டு. எதையும் தியாகம் செய்வதற்காக, மக்கள் இயக்கம் நடத்துவர்.
சுதந்திரம்
முதல் இயக்கமான காங்கிரசுக்கு லட்சியம் என்ன வென்றால், வெள்ளைகாரர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்க வேண்டும். இந்த லட்சியத்திற்காக, காங்கிரஸ் கட்சி உருவானது. நாடு சுதந்திரம் அடைந்த பின், அவர்களின் லட்சியம் முடிந்து விட்டது.
இப்போது இருப்பது காங்கிரஸ் இயக்கம் அல்ல; அது ஒரு அரசியல் கட்சி.
இரண்டாவது இயக்கம், முஸ்லிம் லீக். இந்தியாவுக்கு ஒருநாள் முன்பாக பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றதால், முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர்கள், அங்கு கிளம்பிச் சென்று விட்டனர்.
இந்தியாவில் இருக்கிற முஸ்லிம் லீக், சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்காக நடத்தப்படுகிற ஒரு அரசியல் கட்சியாக இருக்கிறது.
மூன்றாவது இயக்கமான கம்யூனிஸ்ட்களுக்கும், தேவை வெகுவாக குறைந்து போய் விட்டது. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, அடிக்கடி 'ஸ்டிரைக்' நடக்கும். இப்போது ஸ்டிரைக் எல்லாம் இல்லை. இளைய தலைமுறையினருக்கு ஸ்டிரைக் என்றால் என்னவென்றே தெரியாது.
நான்காவதாக, ஹிந்துத்துவா இயக்கம்; அதற்காக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி, அகண்ட பாரதம் என்ற லட்சியத்திற்காக, இயக்கம் நடத்துகின்றனர்.
ஐந்தாவது இயக்கம் திராவிடர்கள். பாசிசம் பேசக்கூடிய ஹிந்துத்துவாவை எதிர்க்கக் கூடியவர்கள் திராவிடர்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திராவிடர்களால் மட்டும்தான் ஹிந்துத்துவாவை எதிர்க்க முடியும்.
மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் போன்ற யாராலும் எதிர்க்க முடியாது. ஹிந்துத்துவா இயக்கத்திற்கு வெறுப்பு அரசியல்; திராவிடர்களுக்கு அன்பு அரசியல்.
இவ்வாறு அந்த வீடியோ பதிவில் அவர் பேசி உள்ளார். இதை காங்கிரஸ் தரப்பில் கடுமையாக எதிர்க்கின்றனர்.
மறக்கக்கூடாது
அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
'காங்கிரஸ் கட்சிக்கு லட்சியம் இல்லை என, அப்துல்லா தவறாக பேசுகிறார். லட்சியம் இருப்பதால் தான், 138 ஆண்டுகளாக நாட்டில் உயிர்ப்புடன் இக்கட்சி இருக்கிறது.
திராவிட கட்சிகளால், கன்னியாகுமரியில் இருந்து, கும்மிடிப்பூண்டி வரை தான் அரசியல் நடத்த முடியும். ஆனால், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, காங்கிரசால் தான் அரசியல் இயக்கம் நடத்த முடியும். இதை ஒருபோதும் அப்துல்லா மறந்து விடக்கூடாது.
கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராட்டத்தை கைவிடவில்லை. தேவையில்லாமல், கூட்டணி கட்சிகளை வம்புக்கு இழுக்கிறார்.
கூட்டணிக்கு வெளியில் இருப்போர் குறித்து பேசி வந்த அப்துல்லா, இப்போது கூட்டணியிலும் சர்ச்சையை ஏற்படுத்துகிறார். அவருடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- நமது நிருபர் -