பழனிசாமிக்கு எதிராக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்; நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
பழனிசாமிக்கு எதிராக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்; நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 27, 2025 03:59 AM
சென்னை: வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் நடந்த அ.தி.மு.க., பிரசார பொது கூட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் வந்ததால் கோபமடைந்த அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி, 'நான் மக்களை சந்தித்து பேசும் இடங்களுக்கெல்லாம், திட்டமிட்டே ஆம்புலன்சை அனுப்புகின்றனர்.
'இது, தி.மு.க.,வின் திட்டமிட்ட சதி. இனிமேல் நோயாளி இல்லாமல் பிரசார கூட்டத்துக்கு நடுவே ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸ் டிரைவரை நோயாளியாக்கி அனுப்ப வேண்டும்' என, ஓட்டுநரை மிரட்டும் வகையில் பேசினார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து அ.தி.மு.க.,வினர் தாக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரி, தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர், 18 மாவட்டங்களில் புகார்கள் அளித்தனர்.
தொடர்ச்சியாக, திருச்சி துறையூரில் நடந்த அ.தி.மு.க., கூட்டத்தில் மயக்கமடைந்த நபருக்கு உதவ வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீதும், அ.தி.மு.க.,வினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 10 பெண்கள் உட்பட, 160க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பழனிசாமிக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்.
பின், சங்கத்தின் மாநில செயலர் இருளாண்டி கூறியதாவது:
பழனிசாமி நடத்தும் பிரசார கூட்டங்கள் பெரும்பாலும் பிரதான சாலையில் தான் நடத்தப்படுகின்றன; அச்சாலையில் தான் ஆம்புலன்ஸ்களும் செல்கின்றன.
'ஆம்புலன்ஸ் டிரைவரை நோயாளி ஆக்குங்கள்' என, முதல்வராக இருந்த பழனிசாமியின் பேச்சை தொடர்ந்து தான், ஆம்புலன்ஸ்கள் மீதும், டிரைவர், டெக்னீஷியன் மீதும் அ.தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்; இது கண்டிக்கத்தக்கது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். அ.தி.மு.க., கூட்டத்துக்கு சிரமம் ஏற்படுத்துவது, எங்கள் நோக்கம் இல்லை. மக்களின் உயிரை காக்க போராடும் எங்களுக்கே இந்நிலைமை என்றால், மற்றவர்களின் நிலை என்ன?
பொது மக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க., உட்பட எந்த கட்சிக்கும் பிரதான சாலைகளில் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.