தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தம்; செங்கோட்டையன் அறிவிப்பு
தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தம்; செங்கோட்டையன் அறிவிப்பு
ADDED : ஜூலை 03, 2026 09:45 PM

சென்னை: 'தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் செய்யப்பட்டு, 15 நாட்களில் செயல்படுத்தப்படும்' என, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: விற்பனை செய்பவர் பெயர், புல எண், பரப்பளவு ஆகியவை, இணையதள பட்டாவில் உள்ள பெயர் மற்றும் விபரங்களோடு ஒன்றாக இருந்து, வில்லங்கம் ஏதும் இல்லையென்றால், வாங்குபவரின் பெயருக்கு தானியங்கி முறையில், இணையதள வழியில் பட்டா மாறுதல் செய்து தரப்படுகிறது.
இந்த நடைமுறையில் சில இடர்ப்பாடுகள் உள்ளன. இதற்காக, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. அதன்படி, நிலத்தை விற்பனை செய்யும் போது, நில உரிமையாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கையொப்பமிடும் நிகழ்வுகளிலும், இந்த சேவையை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.
பட்டாதாரர் தன் நிலத்தை, ஏஜன்ட் வாயிலாக பத்திரப்பதிவு செய்யும்போது, நிலத்தை விற்பனை செய்பவரின் பெயருக்கும், பட்டாதாரரின் பெயருக்கும் பொருத்தம் இல்லாமல் இருந்தாலும், செல்லத்தக்க ஏஜன்ட் என்ற அடிப்படையில், இந்த சேவையை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.
நிலத்தை வாங்கும் நபருக்கு, அதே வருவாய் கிராமத்தில், ஏதேனும் நிலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவருக்கு தானாகவே கடைசி பட்டா எண்ணுக்கு அடுத்த பட்டா எண் ஒதுக்க வழிவகை செய்யப்படும்.
இதன் வாயிலாக கால விரையம் குறையும். தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் செய்யப்பட்டு, 15 நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும். இதனால், பொதுமக்கள் நிலத்தை பதிவு செய்த பின், பட்டா மாறுதல் தொடர்பாக சார் - பதிவாளர் அல்லது தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் செல்லும் நிலை தவிர்க்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
