மக்காச்சோள பயிர்களை அழிக்கும் அமெரிக்கன் படைப்புழு; தீர்வு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
மக்காச்சோள பயிர்களை அழிக்கும் அமெரிக்கன் படைப்புழு; தீர்வு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
ADDED : ஜன 03, 2025 07:07 AM

தமிழகத்தில் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் தொடர்வதால் தீர்வு கிடைக்காமல் விவசாயிகள் கதறுகின்றனர்.
கால்நடை தீவனம், எத்தனால் உட்பட பல்வேறு தேவைகளுக்காக மக்காச்சோள சாகுபடி செய்வது அதிகரித்து வருகிறது. 120 நாட்கள் மானாவாரி பயிராக அறுவடை ஆவதால் மகசூல் அறுவடை போதுமானதாக உள்ளதால் விவசாயிகளும் விரும்பி பயிரிடுகின்றனர்.
தமிழகத்தில் 2018 ல் மக்காசோளப்பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் உருவானது. அப்போது முதல் ஆண்டுதோறும் புழுத்தாக்குதலால் விளைச்சல், அறுவடை குறைவால் கண்ணீர் விடுகின்றனர் விவசாயிகள். மதுரை மாவட்டத்தில் இந்தாண்டு சாகுபடி செய்த 4005 எக்டேர் நிலத்தில் பாதிப்பு மிக அதிகமாகியுள்ளது.
இது குறித்து வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது:
மதுரை அலங்காநல்லுாரில் 64 எக்டேர், கள்ளிக்குடியில் 250 எக்டேர், வாடிப்பட்டி 17, திருமங்கலம் 3873, டி.கல்லுபட்டி 7449, உசிலம்பட்டி 72, செல்லம்பட்டி 122, சேடபட்டி 10 ஆயிரத்து 553 என மொத்தம் 22ஆயிரத்து 400 எக்டேர் பரப்பளவில் சாகுபடியாகியுள்ளது.
ஆவணிக்கு முன்பு நட்டது பாதிக்கவில்லை. மழை பெய்யாமல் வறண்ட காலநிலை நிலவும் போது புழுத்தாக்குதல் வரும். மழை பெய்தால் தண்ணீரில் மிதந்து இறந்து விடும். பறவைகள் தின்று விடும். புரட்டாசி கடைசியில் சாகுபடி செய்த பயிர்களில் தான் பாதிப்பு அதிகம். மதுரை சேடப்பட்டியில் 1635 எக்டேர், டி.கல்லுப்பட்டியில் 2010 எக்டேர், கள்ளிக்குடியில் 65, திருமங்கலம் 295 எக்டேர் என 4005 எக்டேர் பரப்பளவில் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. தற்போது வரை 18 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பத்திருந்தால் இழப்பீட்டு நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. மற்ற விவசாயிகளுக்கு சேத மதிப்பு 33 சதவீதத்திற்கு மேலாக இருந்தால் வேளாண் இயக்குநகரத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அரசு கொள்கை முடிவெடுத்து இழப்பீடு வழங்க வாய்ப்புள்ளது என்றார்.
விவசாயிகள் கூறியதாவது:
தர்மபுண்ணியம், பேரையூர்: நல்லமரம் பகுதியில் ஆடி மாதத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் மழையின்றி கருகியது. கருகிய பயிர்களை அழித்து மீண்டும் மக்காச்சோளம் விதைத்த நிலையில் மழை பெய்து விளைந்த நிலத்தில் படைப்புழு தாக்குதலால் கலங்கி நிற்கிறோம். மருந்துகளை வாங்கி தெளித்தும் படைப்புழு கட்டுப்படவில்லை. முதலில் படைப்புழுக்கள் இலைகளை சாப்பிட தொடங்கியநிலையில் கதிர்களை பதம் பார்த்தன. பலன் கிடைக்காது என விவசாயிகள் அறுவடையே செய்யவில்லை. பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ள எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
வாசுதேவன், திருமங்கலம்:
ஆடி, ஆவணியில் பன்னிக்குண்டு, அம்மாபட்டி, சாத்தங்குடியில் 3 ஏக்கர், தங்கலாச்சேரியில் 20 ஏக்கரில் விவசாயம் செய்திருந்தேன். கோடை காலத்தில் இரண்டு முறை உழவு செய்தோம், பயிர் விதைப்பிற்கு முன்னர் இரண்டு முறை உழவு செய்து பாத்தி கட்டி ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்தேன். இரண்டு முறை களை எடுத்த பின்னர் பயிர்களில் படைப்புழு தாக்குதல் இருந்தது. விவசாயத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி இரண்டு முறை பூச்சி மருந்து தெளித்தும் புழுக்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் அனைத்து பயிர்களும் சேதம் அடைந்தன. பயிர் நன்றாக விளைந்தாலே வரவுக்கும் செலவுக்கும் தான் சரியாக இருக்கும். இப்போது நஷ்டத்தை சந்திக்கிறோம்.
கந்தசாமி, பேரையூர்: குமாரபுரத்தில் 6 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தேன். பருவ மழை சரியாக பெய்யாததால் பயிர்கள் கருகிய நிலையில் அவற்றை அழித்து மீண்டும் மக்காச்சோளம் பயிரிட்டேன். பருவம் தவறி மழை பெய்ததால் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டது. மக்காச்சோள பயிர்களின் இலை, குருத்து, கதிர்கள் அனைத்தையும் காலி பண்ணி விட்டது. இந்த நஷ்டத்தில் இருந்து எப்படி மீண்டு வருவது.
காளியப்பன், பேரையூர்: குமராபுரத்தில் ஐந்து ஏக்கரில் பயிரிட்ட மக்காச்சோள பயிர்கள் படைப்புழுவால் முழுவதும் வீணாகிவிட்டது. மக்காச்சோள விதைகளை எங்களிடம் கிலோ ரூ.20க்கு கொள்முதல் செய்கின்றனர். ஆனால் நாங்கள் விதைகளை 3.5 கிலோ அளவு கொண்ட பைகளை ரூ.1650 க்கு கடைகளில் விலைக்கு வாங்குகிறோம். முன்பு நாங்கள் சேமித்து வைத்திருந்த விதைகளில் இந்தப் படைப்புழுக்கள் வந்ததில்லை. கடைகளில் வாங்கும் விதைகளில் தான் இந்த படைப்புழு உருவாகிறது. ஐந்து ஆண்டுகளாக ஆண்டுதோறும் பாதிப்புக்குள்ளாகிறோம். ஆனால் இழப்பீடு கிடைத்ததில்லை. இந்தமுறையும் பாதிப்பு அதிகமானதால் அறுவடை செய்யாமல் விட்டு விட்டோம்.
ரமேஷ், பேரையூர்: வையூரில் பத்து ஏக்கரில் நடவு செய்துள்ள நிலையில் புழுத்தாக்குதல் பயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பல்வேறு ஆலோசனை வழங்கியும் எதுவும் பயனில்லை. எங்கள் பகுதிகளில் படைப்புழு விட்டு வைக்கின்ற பயிர்களை மான்களும் காட்டுப் பன்றிகளும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. நாங்கள் யாரிடம் போய் முறையிடுவது.
தேனி
ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை
தேனி மாவட்டத்தில் மானாவரியாக சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளபயிரில் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 5400 எக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர்கள் இளம் செடிகளாகவும், வளர்ந்த செடிகளிலும், கதிர்களிலும் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அதே நிலை ஏற்படுமோ என விவசாயிகள் பயப்பட துவங்கி உள்ளனர்.
இப்பூச்சிகள் இலைகளின் அடிப்பகுதியில் முட்டையிடுகின்றன. இதிலிருந்து வரும் புழுக்கள் அடிப்பகுதி பச்சையத்தை முழுதும் காலி செய்கின்றன. வளர்ந்த புழுக்கள் தண்டுப்பகுதி, நுனிப்பகுதி, மக்காச்சோளம் ஆகியவற்றை சேதப்படுத்துகின்றன.
இருளப்பராஜ், ஆசாரிப்பட்டி, ஆண்டிபட்டி: 21 ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரிட்டு வருகிறேன். 4 ஆண்டுகளாக புழுக்கள் தாக்கம் அதிகம் உள்ளது. மக்காச்சோளம் முளைத்த 25 நாளில் புழு தாக்கம் தெரிகிறது. விதை மூலம் புழு தாக்கம் ஏற்படுவதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். செடியில் உருவாகும் ஓரிரு புழுக்கள் பயிரின் தண்டு, குருத்து பகுதிகளை தின்று வளர்ச்சியை தடுக்கிறது. புழுக்கள் கருப்பு, பச்சை நிறங்களில் தென்படுகிறது. குருத்து முளைக்கும் வரை பயிர்களை காப்பாற்றி விட்டால் பாதிப்பை தவிர்க்க முடியும். ஆண்டிபட்டி பகுதியில் 2000 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. பயிர்களை தாக்கும் புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. மக்காச்சோள சாகுபடியில் புழுக்களால் பாதிப்பு தொடர்ந்தால் வரும் காலங்களில் விளைச்சலே இல்லாமல் போய்விடும்.
கோவிந்தராமர், விசுவாசபுரம், போடி: அறுவடை முடிந்து தற்போது மீண்டும் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளேன். பயிரில் படைப்புழுக்கள் தாக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பயிரின் குருத்து, தண்டு, இலை பகுதியை உண்டு வருவதால் மக்காச்சோளம் விளைச்சல் ஏற்படும் போது குருதில் ஓட்டை விழுந்து பருமன் இன்றி உற்பத்தி பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. 15 நாட்களுக்கு முன்பு ஒரு முறை மருந்து, உரமிட்டும் பயன் இல்லை.
தேனி வேளாண் இணை இயக்குநர் சாந்தாமணி கூறியதாவது, படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். புழு தாக்குதலுக்கு ஆளான 15-20 நாள் பயிரில் எக்டேருக்கு அசாடிராக்டின் 2.5 லிட்டர்,30-40 நாட்கள் பயிரில் மெட்டாரைசீயம் அனிசோபிலே 2.5 கிலோ , 40-60 நாட்கள் பயிரில் நவலுாரான் இ.சி., 750மி.லி., தெளிக்க வேண்டும். பயிரிட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகியிருந்தால் இமாமெக்டின் பென்சோயேட் 200 கிராம் அல்லது ஸ்பைனிட்ராம் 250 மி.லி., தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
சிவகங்கை
ஆலோசனையின்றி விவசாயிகள் தவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி, தேவகோட்டை ஆகிய தாலுகாக்களில் அதிகபட்சமாக 100 ஏக்கர் வரை விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் மக்காசோளம் பயிரிடும் விவசாயிகள் ஜனவரியில் அறுவடை செய்துவிடுவர்.
நல்ல கோடைவெயில் அடித்தால் மட்டுமே மக்காச்சோளத்திற்கு எந்தவித பூச்சி, புழு தாக்குதல் இன்றி விளையும். தற்போது தொடர் மழை,பனி காலமாக இருப்பதால் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கம் அதிகரித்து, விளையும் முன்பே பயிர்களை அழித்து விடுகின்றன.
இதை விவசாயிகள் கவனித்து மருந்து தெளித்து காப்பாற்றினால் கூட ஏக்கருக்கு 1.5 முதல் 2 டன் தான் அறுவடை செய்ய முடியும். அதிக முக்கியத்துவம் வாய்ந்த இப்பயிர்களை விவசாயிகள் ஆர்வமுடன் பயிரிடவும், உரிய ஆலோசனைகளை வழங்கவும் வேளாண்மை துறை முன்வருவதில்லை என்ற அதிருப்தி விவசாயிகளிடம் உள்ளது.
காளையார்கோவில் அருகே சானாவூரணி விவசாயி ஏ.அமல்ராஜ் கூறியதாவது: நான் ஒன்றரை ஏக்கரில் நடவு செய்துள்ளேன். காளையார்கோவில் ஒன்றியத்தில் மட்டுமே 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். படைப்புழு, பூச்சிகள் தாக்குதலை தடுத்து, மக்காச்சோள விளைச்சலை அதிகரிக்க அரசும் வேளாண்மை துறையும் ஆலோசனை வழங்க வேண்டும்.
விதையில் தோன்றும் படைப்புழு
சிவகங்கை வேளாண் இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் கூறியதாவது:
மக்காச்சோள பயிருக்கான விதை அமெரிக்காவில் இருந்து வந்தது. விதை மூலமே படைப்புழு உருவாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதை தடுத்து, மக்காச்சோள பயிர் விளைச்சலை அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
- நமது நிருபர் குழு -