துணைவேந்தர் பிரச்னைக்கு சுமூக தீர்வு; அமைச்சர் நிர்மல்குமார்
துணைவேந்தர் பிரச்னைக்கு சுமூக தீர்வு; அமைச்சர் நிர்மல்குமார்
ADDED : ஜூன் 22, 2026 10:23 PM

சென்னை: ''சென்னையில் மகளிர் சட்டக்கல்லுாரி அமைக்கப்படும்,'' என, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின், சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலையின் கீழ் இயங்கும், அரசு கல்லுாரிகளில், 2026 - 27ம் கல்வியாண்டு, 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு, முதல் கட்ட கலந்தாய்வு நடந்தது. கல்லுாரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல்குமார், சேர்க்கை ஆணை வழங்கினார்.
அப்போது, அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் உள்ள அரசு சட்டக்கல்லுாரிகளின் தரம் மேம்படுத்தப்படும். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த கல்லுாரிகளாக மாற்றப்படும். சென்னையில் மகளிர் சட்டக்கல்லுாரி ஏற்படுத்தப்படும்.
அதற்கு நிலம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மின் துறை உட்கட்டமைப்பில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றை சரி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
பல்வேறு பகுதிகளில், 20 முதல் 25 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. அதனால் பிரச்னைகள் வருகின்றன. கவர்னர் பதவி என்பது, மேனேஜர் போன்ற பதவிதான். அது, மாநிலத்துக்கு தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு. மாணவர்களுக்கு என்ன தேவை என்பது, மாநில அரசுக்கே தெரியும். அதில், கவர்னருக்கு எதுவும் தெரியாது.
துணைவேந்தர் நியமன விவகாரத்தில், சுமூகமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரம்பூரில் பல்வேறு இடங்களில், தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர், மின் துண்டிப்பு குறைந்தது.
மேலும், பெரம்பூர் பகுதியில் அடுத்தடுத்து, 2 டிரான்ஸ்பார்மர்கள் தீப்பிடித்து எரிந்தன. அது குறித்தும் விசாரித்தோம். மின்சார பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, சில ஆண்டுகள் ஆகும். கடந்த 30 ஆண்டுகளாக மின்சார துறையை சீரழித்துவிட்டு, நான்கு வாரங்களில் சரி செய்ய சொன்னால், எப்படி செய்ய முடியும். இருந்தாலும், சீர்செய்யும் பணிகளில் ஈடுபடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
