ADDED : ஏப் 12, 2025 01:32 AM
கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை பா.ஜ., உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 1980ல் துவங்கப்பட்ட பா.ஜ., 1984 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, வெறும் இரண்டு எம்.பி.,க்களை மட்டுமே பெற்றது. 1989ல் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளத்துடன், சில மாநிலங்களில் மறைமுகமாக கூட்டணி வைத்த பா.ஜ., 85 இடங்களில் வென்று, தேசிய அரசியலில் முதல் முறையாக அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அந்தத் தேர்தலில், பா.ஜ., ஆதரவுடன்தான் வி.பி.சிங் பிரதமரானார்.
அதன்பின், 1991, 1996 லோக்சபா தேர்தல்களில் பா.ஜ.,வுக்கு ஏறுமுகம் என்றாலும், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க சிவசேனா தவிர, எந்த கட்சியும் முன்வரவில்லை. 1996ல் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பின், வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. அந்த அரசை ஆதரிக்க, எந்தக் கட்சியும் முன்வராததால், 13 நாட்களில் கவிழ்ந்தது.
அதைத் தொடர்ந்து, 1998 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., - ம.தி.மு.க., மற்றும் பா.ம.க.,வுடன் கூட்டணி வைத்தது. அந்தத் தேர்தல் வாயிலாக, தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு மூன்று எம்.பி.,க்கள் கிடைத்தனர்.
தேசிய அளவில் பா..ஜ.,வுடன் பல கட்சிகள் கூட்டணி அமைக்க இருந்த தயக்கத்தை உடைத்ததே, 1998ல் அமைந்த அ.தி.முக., கூட்டணி தான்.
பின், 1999 லோக்சபா, 2001 சட்டசபை தேர்தல்களில், தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்தது. தொடர்ந்து, 2004 லோக்சபா தேர்தலில், இரண்டாவது முறையாக அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி ஏற்பட்டு படுதோல்வி அடைந்தது.இதனால், இனி பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என ஜெயலலிதா அறிவித்தார்.
இருந்தபோதும், 2019 லோக்சபா தேர்தலில், மூன்றாவது முறையாக அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணி ஏற்பட்டது; 2021 சட்டசபை தேர்தலிலும் தொடர்ந்தது. பின், 2023ல் பா.ஜ.,வுடனான கூட்டணியை, அ.தி.மு.க., முறித்துக் கொண்டது.
பின், 2024 லோக்சபா தேர்தலில், இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தன. இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன், நான்காவது முறையாக அ.தி.மு.க., கூட்டணியை பா.ஜ., நேற்று உறுதிப்படுத்தி உள்ளது.

