அ.தி.மு.க., -- பா.ம.க.,வை கபளீகரம் செய்வதே அமித் ஷாவின் இலக்கு: தி.மு.க.,
அ.தி.மு.க., -- பா.ம.க.,வை கபளீகரம் செய்வதே அமித் ஷாவின் இலக்கு: தி.மு.க.,
ADDED : ஜூன் 09, 2025 03:25 AM

சென்னை: தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அமித் ஷா காட்டும் அக்கறை என்பது பசுத்தோல் போர்த்திய புலி போன்றது. ஒடிசா, ஹரியானா, மஹாராஷ்டிரா, டில்லி போல தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி மலரும் என அமித் ஷா பேசியிருக்கிறார்.
ஒடிசா தேர்தலின்போது, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாண்டியனை குறிப்பிட்டு, தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என சீறினார். இப்போது தமிழ், தமிழர்கள் என மதுரையில் கபட வேடம் தரிக்கிறார்.
அ.தி.மு.க.,வை மிரட்டி விழுங்கிக் கொண்டிருக்கும் அமித் ஷா, தி.மு.க., ஆட்சி மீது அவதுாறு பொய் மூட்டைகளை அவிழ்த்து உள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைவர்கள் தயவு செய்து பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்று அ.தி.மு.க., வேட்பாளர்கள் கெஞ்சும் அளவுக்கு பா.ஜ., மீதான வெறுப்பு தமிழகத்தில் நிலவியது.
அந்த வெறுப்பு அடங்கவில்லை என்பதையே லோக்சபா தேர்தல் முடிவும் காட்டியது. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் பா.ஜ., மீதான வெறுப்பு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
இதெல்லாம் உளவுத் துறை மூலம் அமித் ஷாவுக்கு தெரியும். தேர்தலில் வெல்வது அவரது நோக்கமல்ல; அ.தி.மு.க., - பா.ம.க., கட்சிகளைக் கபளீகரம் செய்து அந்த இடத்திற்கு பா.ஜ., வர வேண்டும் என்பதே அவர்களின் ஒற்றை இலக்கு. அதற்காக 2026 சட்டசபை தேர்தலைப் பயன்படுத்துகின்றனர்.
இப்போது அந்தப் பணியை அமித் ஷா கையில் எடுத்துள்ளார். எத்தனை 'ஷா'க்கள் வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது.
ஏற்கனவே, 13 தேர்தல்களில் வெற்றி பெற்ற தி.மு.க., கூட்டணி, 2026 தேர்தலில் மட்டுமல்ல அதன் பின் வரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றியைப் பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

