அமித் ஷா விருப்பம் சாத்தியப்படாது; சொல்கிறார் திருமாவளவன்
அமித் ஷா விருப்பம் சாத்தியப்படாது; சொல்கிறார் திருமாவளவன்
ADDED : ஜூன் 11, 2025 03:37 AM

பெரம்பலுார்: பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார். தொடர்ந்து வரப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். சட்டசபை தேர்தல் முடியும் வரையில், அவர் தமிழகம் வருவார். அதன்பின் வரமாட்டார். அ.தி.மு.க.,வை வைத்துக்கொண்டு, தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க விருப்பப்படுகிறார். ஆனால், அது கைகூடாது.
ஏற்கனவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிகளில் இடம்பெற்றிருந்த பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளே மீண்டும், அதே கூட்டணியில் இணைய தயக்கம் காட்டுகின்றன.
அதுமட்டுமல்ல, நடிகர் விஜயையும் தங்கள் கூட்டணியில் இணைத்துவிட வேண்டும் என ஏக்கத்தோடு முயற்சிக்கின்றனர். சாத்தியப்படாது என்று தெரிந்தும் முயற்சிக்கின்றனர். அதுவே, அவர்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது.
இந்த சூழலில்தான், அடுத்து தே.ஜ., கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் என அமித் ஷா பேசுகிறார். சரியான கூட்டணி அமைக்க முடியாதவர்கள், எந்த தைரியத்தில் ஆட்சி அமைப்போம் என பேசுகின்றனர் என தகவல் திரட்டினால், எல்லோரும் சொல்வது - மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடியைத்தான்.
அவர்கள் என்ன செய்தாலும், தமிழகத்தில் அவர்களுடைய எண்ணங்களும் முயற்சிகளும் பலிக்காது.
மஹாராஷ்டிரா, ஒடிஷா, டில்லியைப் போல, தமிழகத்திலும் எதையாவது செய்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறது பா.ஜ., மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட அரசியல் சூழல் தமிழகத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.