தி.மு.க.,வில் இணைந்தார் அ.ம.மு.க., மாணிக்கராஜா! கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்த டிடிவி
தி.மு.க.,வில் இணைந்தார் அ.ம.மு.க., மாணிக்கராஜா! கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்த டிடிவி
ADDED : ஜன 23, 2026 10:02 PM

சென்னை: அ.தி.மு.க., இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.ம.மு.க., துணை பொதுச்செயலராக இருந்த மாணிக்கராஜா, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ்சையும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனையும் கடுமையாக விமர்சித்து வந்தார், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன். இபிஎஸ்சை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என்று தொடர்ந்து கூறி வந்த தினகரன், திடீரென தே.ஜ., கூட்டணியில் இணைந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.ம.மு.க., துணை பொதுச்செயலராக இருந்த மாணிக்கராஜா, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, தி.மு.க.,வில் இணைந்தார். தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், மாணிக்கராஜாவுடன் சேர்ந்து, அ.ம.மு.க., மாவட்டச் செயலர்கள் ராமச்சந்திரமூர்த்தி, ஸ்டெல்லஸ், ரத்னராஜ் ஆகியோரும் தி.மு.க.,வில் ஐக்கியமாகினர்.
மாணிக்கராஜா அளித்த பேட்டி:
மீண்டும் தே.ஜ., கூட்டணி என்ற நிலைப்பாட்டை தினகரன் எடுத்த காரணத்தால், தொண்டர்கள், மாவட்டச் செயலர்கள் விருப்பப்படி தி.மு.க.,வில் இணைந்துள்ளோம். தே.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., இணைய அழுத்தம் தரப்பட்டதா என தெரியாது. இது, ஆபத்தில் தான் முடியும்; அ.ம.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்; தேர்தலில் தோல்வி தான் கிடைக்கும் என பல முறை எடுத்துச் சொல்லியும் பலனில்லை. அ.தி.மு.க.,வும், அ.ம.மு.க.,வும் தேர்தல் களத்தில் இணைந்து பணியாற்ற முடியாது.
எனவே தான், தாய் கட்சியான தி.மு.க.,வில் இணைந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க.,வில் இணைவதற்கு முன், அ.ம.மு.க., அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மாணிக்கராஜாவை நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரன் அறிவிப்பு வெளியிட்டார்.

