ADDED : டிச 24, 2024 07:14 AM
சென்னை: 'ஸ்மார்ட் போன், டேப்லெட் மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றுக்கான அடுத்த தலைமுறை, 'அமோல்ட் டிஸ்ப்ளே' தயாரிப்பதற்கான ஆராய்ச்சி மையத்தை, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலர் கிருஷ்ணன், சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கி வைத்தார்.
இந்த அமோல்ட் ஆராய்ச்சி மையத்துக்கு, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டாடா சயின்ஸ் போன்றவை நிதியுதவி அளிக்கின்றன.
இதில், 'டிஸ்பிளே'க்களை மேம்படுத்தும் பணியில் பல்துறை ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.
இதுகுறித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் கிருஷ்ணன் கூறுகையில், “இம்மையத்தில், மொபைல் போன்களுக்கான, ஓ.எல்.இ.டி., லைட்டிங், ஓ.பி.வி., பவர் சோர்ஸின் முன்மாதிரிகளை உருவாக்கும் ஆய்வுகள் நடக்கும். இதனால், உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளில் உலகத்தரம் இருக்கும்,” என்றார்.
நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.