தனியார் பங்களிப்புடன் பொழுதுபோக்கு பூங்கா நீர் சாகச விளையாட்டுகள்: அமைச்சர் ராஜேந்திரன்
தனியார் பங்களிப்புடன் பொழுதுபோக்கு பூங்கா நீர் சாகச விளையாட்டுகள்: அமைச்சர் ராஜேந்திரன்
ADDED : ஏப் 18, 2025 01:27 AM

சென்னை:''தமிழகத்தில், தனியார் பங்களிப்புடன் பொழுதுபோக்கு பூங்காக்கள், நீர் சாகச விளையாட்டுகள் அமைக்கப்படும்,'' என, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்தார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
மாமல்லபுரத்தில், 30 கோடி ரூபாய், கன்னியாகுமரியில் 20 கோடி ரூபாய், திருச்செந்துாரில் 30 கோடி ரூபாய், வேளாங்கண்ணி, நாகூரில், 20 கோடி ரூபாய் என, மொத்தம் 100 கோடி ரூபாயில், சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
நீலகிரி மாவட்டம், பைகாரா நீர்வீழ்ச்சி, படகு இல்லம், சேலம் மாவட்டம் ஏற்காடு, பூலாம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரி, கடலுார் மாவட்டம் வீராணம் ஏரி பகுதியில், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை பகுதி, கோமுகி அணை, மணிமுத்தாறு அணை, சேலம் மாவட்டம் கருமந்துறை பழப்பண்ணை ஏரி ஆகிய பகுதிகளில், 10 கோடி ரூபாயில் சுற்றுலா உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் 12 கோடி ரூபாயில், கூடுதல் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். ஏற்காடு, ஏலகிரியில், 'ரோப் கார்' அமைக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில், 'ஹோட்டல் தமிழ்நாடு' வளாகத்தில் 5 கோடி ரூபாயில் கூடுதல் அறைகள், உணவகம் அமைக்கப்படும்.
சுற்றுலா துறையின் பல்வேறு செயல்பாடுகளை முனைப்புடன் செயல்படுத்த, ஒருங்கிணைந்த திட்ட மேலாண்மை அமைப்பு மற்றும் மருத்துவ சுற்றுலா பிரிவு உருவாக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்களில், தகவல் பலகைகள், தனித்துவம் வாய்ந்த வழிகாட்டி பலகைகள், 3 கோடி ரூபாயில் நிறுவப்படும்.
தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், திருச்சி முக்கொம்பு பகுதிகளில், பொது,- தனியார் பங்களிப்புடன் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படும்.
துாத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, முள்ளக்காடு, நெல்லை மாவட்டம் உவரி கடற்கரை, ராமநாதபுரம் மாவட்டம் ஆத்தங்கரை ஆகிய இடங்களில், நீர் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சி வசதிகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.