ரூ.35 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் மின் உதவி பொறியாளர்!
ரூ.35 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் மின் உதவி பொறியாளர்!
ADDED : ஆக 04, 2025 05:33 PM

விருதுநகர்: விருதுநகரில் மீட்டர் இடமாற்றம் செய்ய ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலகம் உதவி பொறியாளர் மாடக்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.
விருதுநகரை சேர்ந்த காந்தி மகன் மாடக்குமார். மின்வாரியத்தில் விருதுநகர் வடக்கு ஊரக பிரிவு உதவி பொறியாளராக பணிபுரிகிறார். இவரிடம் டி.கே.எஸ்.பி., நகரை சேர்ந்த சென்னையில் பணிபுரியும் ஐ.டி., ஊழியரான லலிதாம்பிகை 40, புதிய வீடு கட்டியதால் மீட்டரை இடமாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார். இதற்கு மாடக்குமார் ரூ.35 ஆயிரம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் லலிதாம்பிகை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், ஜாஸ்மின் மும்தாஜ் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை லலிதாம்பிகையிடம் கொடுத்தனர்.
பணம் தயாராக உள்ளதாக உதவி பொறியாளரிடம் லலிதாம்பிகை கூற, வீட்டில் வந்து பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். வீட்டிற்கு வந்து பணத்தை பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மாடக்குமாரை கையும், களவுமாக கைது செய்தனர்.