ADDED : பிப் 26, 2024 01:41 AM
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. ஆனாலும், பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவியது. மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில், 38.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில், 3 செ.மீ., மழை பெய்தது. மாஞ்சோலை, கந்தர்வக்கோட்டையில், 2 செ.மீ., மழை பதிவானது.
தென் மாநிலங்களின் வளிமண்டல கீழடுக்கில் ஒரு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யலாம்.
சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாகும். கடலோரம் அல்லாத மாவட்டங்களில், வெப்பநிலை அதிகரிப்பால், அசவுகரியமான நிலை ஏற்படும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

