அரிய எழுத்து ஆவணங்களை இலவசமாக டிஜிட்டலாக்க வாய்ப்பு
அரிய எழுத்து ஆவணங்களை இலவசமாக டிஜிட்டலாக்க வாய்ப்பு
ADDED : மார் 21, 2024 12:32 AM
சென்னை:தமிழில் உள்ள அரிய எழுத்து ஆவணங்களை, தமிழ் இணைய கல்விக்கழகம் இலவசமாக டிஜிட்டல் உருவில் மாற்றித் தர முன்வந்துள்ளது.
தமிழில் உள்ள அரிய எழுத்து ஆவணங்கள் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கும் வகையில், அவற்றை டிஜிட்டல் ஆக்கும் பணியை, தமிழ் இணைய கல்விக் கழகம் செய்து வருகிறது. அதில் அரிய தமிழ் நுால்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றம் செய்யப்பட்டன.
இந்நிலையில், பொதுமக்களிடம் உள்ள எழுத்து ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்கி, இணையதளத்தில் பதிவேற்றுவதுடன், உரியோருக்கு அசல் படிவங்களையும் டிஜிட்டலாக மாற்றி, ஒரு படியையும் வழங்கதிட்டமிடப்பட்டுள்ளது.
ஆய்வு ஆதாரங்கள், அச்சுப் புத்தகங்கள், இதழ்கள், குறு வெளியீடுகள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச் சுவடிகள், பழைய நாணயங்கள், செப்பேடுகள், புகைப்படங்கள், கல்வெட்டுகள், ஒலி - ஒளி ஆவணங்கள், தொல்லியல் சின்னங்களை வைத்திருப்போர், இந்த திட்டத்தில் பயனடையலாம்.
பொதுமக்கள் மட்டுமின்றி கல்வி, ஆய்வு நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நுாலகங்கள், ஆவணக் காப்பகங்கள், ஆதீனங்கள், மடங்கள், சங்கங்கள், கோவில், மசூதி, சர்ச்சுகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரிய ஆவணங்களையும், டிஜிட்டலுக்கு மாற்றலாம்.
ஆவணங்கள் தருவோரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள், இணையதளத்தில் பதியப்பட உள்ளன.
மேலும் விபரங்களுக்கு, இந்நிறுவனத்தின் ஆய்வுவள அலுவலர் சித்தானை, 94444 43035 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

