ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் முடங்கும் அபாயம்! மசோதா வரைபடத்தில் மாற்றம் ஏற்படுத்த கோரிக்கை
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் முடங்கும் அபாயம்! மசோதா வரைபடத்தில் மாற்றம் ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஏப் 08, 2025 04:26 AM

வால்பாறை: 'சுற்றுசூழல் உணர் திறன் மசோதா' வரைவு அறிக்கையை நடைமுறைப்படுத்தினால், பி.ஏ.பி., திட்டத்தில், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த முடியாது, என, சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை அமைந்துள்ளது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில், வளமையான வனம், உயிரினங்கள், நீர் ஆதாரம் ஆகியவற்றை எதிர்காலங்களில் மாசில்லாமல் பேணிக்காக்கவும், இயற்கையுடன் இணைந்து மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் பழக்கத்தை கொண்டு வரவும், மத்திய அரசு கடந்த ஆண்டு 'சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா' வரைவு அறிக்கை வெளியிட்டது.
இந்த வரவு அறிக்கையினை, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, வால்பாறை உள்ளிட்ட, 183 கிராமங்களில் தாக்கல் செய்த பின், அதனை சட்ட வடிவாக்கி நடைமுறைப்படுத்துவது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா அமல்படுத்தினால், வால்பாறை மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என, தகவல் பரவியுள்ளது. மசோதா வரைவு அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்வேறு அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ் கூறியதாவது:
இந்த மசோதாவால், வால்பாறை மக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வனச்சட்டம் கடுமையாக்கப்படுவதால், மாலை, 6:00 மணிக்கு மேல் சுற்றுலா பயணியர் வால்பாறை வந்து செல்ல தடை விதிக்கப்படும்.
ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான ரோடுகள் வனத்துறை வசமாவதால், வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படும். சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் உட்பட அனைத்தும் முடங்கப்படும். இந்த மசோதாவை ரத்து செய்ய, மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் சுதீர் கூறியதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகமாக வால்பாறை அறிவிக்கப்பட்ட பின், இது வரை எந்த பாதிப்பும் இல்லை. இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவால், வால்பாறையில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை செயல்படுத்த முடியாது.இந்நிலையில், வால்பாறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும், ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டத்தை செயல்படுத்தும் வகையிலும், மசோதா வரைபடத்தை மாற்றியமைக்க, மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.
வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மசோதாவால் வால்பாறை மக்களுக்கும், தேயிலை தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் குறித்து வரைவு அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன,' என்றார்.

