தமிழர்களை தாழ்த்தி பேசியதை கண்டுபிடித்ததால் சமாளிப்பு! ஆய்வாளர் மன்னர் மன்னன் கருத்து
தமிழர்களை தாழ்த்தி பேசியதை கண்டுபிடித்ததால் சமாளிப்பு! ஆய்வாளர் மன்னர் மன்னன் கருத்து
ADDED : ஜன 24, 2025 01:01 AM
சென்னை:'சிந்துவெளி நாகரிகம், நம் நாட்டின் மூத்த நாகரிகம். அது, ஆரியர்களால் அழிக்கப்பட்ட பின், அங்கிருந்தோர் தமிழகம் வந்தனர்' என, தமிழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், சிந்துவெளி நாகரிகம் போலவே, அதே காலகட்டத்தில் தமிழகத்தில் தனித்த நாகரிகம் இருந்தது என, அந்த கூற்றை மறுக்கும் ஆய்வாளர்களும் உள்ளனர்.
இந்நிலையில், உலகில் முதலில் இரும்பை கண்டறிந்தவர்கள் தமிழர்கள் என முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இது குறித்து, நாணய, வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் கூறியதாவது:
பொதுவாக திராவிட கட்சியினர், தமிழர்களுக்கு தாங்கள் தான் நாகரிகம் கற்பித்தவர்கள் என்பதை போலவே கூறி வருகின்றனர். தமிழர்களை தாழ்த்தவே, சிந்துவெளி என்ற ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர்.
அதாவது, சிந்துவெளியிலிருந்து வந்தவர்கள் தமிழர்கள் என்றால், தமிழர்களுக்கு தமிழகம் சொந்தம் இல்லை என்பதாகிவிடும். தமிழர்களை தாழ்த்தவே, இப்படியான கருத்துகளை கூறுகின்றனர்.
சிந்துவெளியில் செம்பை அறுக்க, 'டார்ச்' எனும் நுண்கற்கால கருவிகளை பயன்படுத்திய காலத்தில், தமிழகத்தில் உறுதியான இரும்பு வாளும், கோடரியும் பயன்பாட்டில் இருந்துள்ளன. அப்படி உள்ளபோது, சிந்துவெளி மனிதனிடமிருந்தா, தமிழன் நாகரிகம் கற்றிருப்பான்?
இந்நிலையில், 'சிந்து முதல் வைகை வரை' போன்ற நுால்களை எழுதி, தமிழனை தாழ்த்துகின்றனர். 'வைகை முதல் சிந்து வரை' என எழுதாததில் தான், தமிழன் வெறுப்பு அரசியல் உள்ளது.
தமிழகத்தில் அகழாய்வுகளின் அடிப்படையில், 'இரும்பின் காலம் மூத்தது' என ஆய்வாளர்கள் கூறியபோது, திராவிட அரசுகள் அதை வெளியிடவில்லை.
அது குறித்து பலரும் எழுதி உள்ளனர். நான், 2018ல் 'ஆயுத தேசம்' என்ற நுாலில் எழுதினேன். அப்போது, என்னை வசை பாடிய திராவிட கூட்டம், தற்போது தேர்தல் நெருங்குவதாலும், தமிழர்கள், திராவிட கட்சிகளால் இழந்த உரிமைகளை பேச துவங்கி உள்ளதாலும், வேறு யாருக்கும் பெயர் வந்துவிடக் கூடாது என்பதால், தற்போது அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது.
சமஸ்கிருதம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு எழுத்து தோன்றும் முன்; எகிப்து, கிரேக்கம், ஐரோப்பிய நாடுகளும், சிந்து சமவெளி மக்களும், இரும்பை அறியும் காலத்திற்கு முன், இரும்பை தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது தான் உண்மை. அது, இப்போதாவது ஏற்கப்பட்டதில் மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறினார்.

