ADDED : மே 22, 2026 07:39 AM
த.வெ.க., அமைச்சரவையில், தன் ஆதரவாளர்கள் 14 பேருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், அமைச்சர் பதவி வாங்கி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, விஜயின் நண்பர் விஷ்ணு ரெட்டி, வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி என நான்கு கோஷ்டிகள் உள்ளன.
இவர்களில், ஆனந்த் அதிக ஆதரவாளர்களை கட்சியில் வைத்துள்ளார். எனினும், வேட்பாளர் தேர்வில், அவரால் அதிகம் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
ஆதவ் அர்ஜுனா, விஷ்ணு ரெட்டி, ஜான் ஆகியோர் பரிந்துரைத்த, கட்சியில் பொறுப்பில் இல்லாத, 106 பேர் வேட்பாளர் ஆக்கப்பட்டனர். அவர்களில், 49 பேர் வெற்றி பெற்றனர்.
கட்சி பொறுப்பில் இருந்தவர்களில், 57 பேர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், அமைச்சர் தேர்விலும், ஆதவ், ஜான், விஷ்ணு பரிந்துரைத்த நபர்களில், பலரின் பெயரை, முதல்வர் விஜய், 'டிக்' செய்து வைத்திருந்தார்.
இதற்கிடையே, கூட்டணி கட்சிகளை, அமைச்சரவைக்குள் கொண்டு வருவது, அ.தி.மு.க., அதிருப்தி அணியைச் சேர்ந்தவர்களுக்கு, அமைச்சர் பதவி கொடுப்பது தொடர்பாக, பல கட்ட பேச்சுகள் நடந்து வந்தன.
இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்களாக இருக்கும் நிர்வாகிகளை, அமைச்சராக்கினால் தான், கட்சியை வளர்க்க முடியும் என, முதல்வர் விஜயிடம் தொடர்ச்சியாக ஆனந்த் வலியுறுத்தினார்.
அதன் விளைவாக, பட்டியல் மாற்றப்பட்டு, ஆனந்த் பரிந்துரைத்த பலருக்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
அதன்படி, சரத்குமார், பார்த்திபன், விஜய் பாலாஜி, காந்திராஜ், ஜெகதீஸ்வரி, விக்னேஷ், முகமது பர்வேஸ், சம்பத் குமார், தென்னரசு, வினோத், ராஜ்குமார், மதன் ராஜா, பிரபு ஆகிய 13 மாவட்ட செயலர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
அதேபோல, கட்சியின் மாநில துணை செயலர் விஜயலட்சுமியும் அமைச்சராகி உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
