தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் கலக்கலாக நடந்த அனந்தரா கலை நிகழ்ச்சி
தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் கலக்கலாக நடந்த அனந்தரா கலை நிகழ்ச்சி
ADDED : மே 13, 2025 04:55 AM

சென்னை : தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் நடந்த, 'அனந்தரா - 2025' கலை விழாவில், நடிகர் சிம்பு, நடிகை மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றதால், நிகழ்ச்சி களைகட்டியது.
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில், மூன்று நாட்கள் நடக்கும் 'அனந்தரா - 2025' கலை நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதன் நிறைவு விழாவில், பல்கலை வேந்தர் சீனிவாசன், வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன், பதிவாளர் தனசேகரன் தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், நடிகர்கள் சிம்பு, வி.டி.வி.கணேஷ், நடிகை மீனாட்சி சவுத்ரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாணவர்களின் கேள்விகளுக்கு, சிம்பு பதில் அளித்தார்.
அப்போது மாணவர்கள் கேட்டதால், 'லுாசுப் பெண்ணே' பாடலை பாடி, மாணவர்களுடன் நடனம் ஆடினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு தன் கையெழுத்திட்ட பந்துகளை வழங்கி, 'செல்பி' எடுத்துக் கொண்டார்.
அதேபோல், நடிகை மீனாட்சி சவுத்ரியும் மாணவர்களுடன் உரையாடினார்; அவர்களுடன் நடனமாடி உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியை, நடிகர் ம.கா.பா.ஆனந்த், தியா மேனன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலை கலை நிகழ்ச்சியான, 'அனந்தரா - 2025'ல் பங்கேற்ற நடிகர் சிம்பு, பல்கலை வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன், நடிகை மீனாட்சி சவுத்ரி.