ADDED : ஜூலை 07, 2025 01:09 AM
திண்டிவனம்: ராமதாசிற்கும், அன்புமணிக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிர்வாகக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மாற்றியமைக்கப்பட்ட 21 பேர் கொண்ட நிர்வாகக் குழு பட்டியலில் அன்புமணி பெயர் இடம் பெறவில்லை.
கட்சி நிறுவனர் ராமதாஸ் பெயரில் நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் லெட்டர் பேடில், அன்புமணி, ஜி.கே.மணி என இருவரது பெயர்கள் இடம் பெற்றிருக்கும்.
நிர்வாகக் குழு கூட்ட முடிவுக்குப் பின், தற்போது ராமதாஸ் பெயரில் லெட்டர்பேடில் வெளியாகும் அறிவிப்புகளில் அன்புமணி பெயர் இல்லை. அதேபோல, நிர்வாகிகள் நியமன அறிவிப்பு வெளியிடும்போது, அன்புமணிக்கும் நகல் அனுப்பப்படுவதாக குறிப்பிடப்படும். ஆனால், நேற்று முதல் அன்புமணிக்கு நகல் அனுப்பப்படவில்லை.
இந்நிலையில், பா.ம.க., கவுரவ தலைவர் மணி நேற்று அளித்த பேட்டி:
என்று தணியும் எங்கள் தாகம்; எப்போது நீங்கும் எங்கள் வேதனை. ஒற்றுமை, வளர்ச்சி இதுதான் பா.ம.க.,வில் உள்ளவர்களின் வேதனையாக உள்ளது.
பா.ம.க.,வின் புதிய நிர்வாகக் குழுவில் உள்ளவர்களின் பட்டியலை ராமதாஸ் முறைப்படி வெளியிடுவார். பா.ம.க., மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

