மக்களை வதைக்கிறது தி.மு.க., அரசு; அன்புமணி குற்றச்சாட்டு
மக்களை வதைக்கிறது தி.மு.க., அரசு; அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 29, 2025 04:35 AM

சென்னை : 'மஹாராஷ்டிராவில் மின் கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில், தி.மு.க., அரசு, மின் கட்டணத்தை உயர்த்தி, மக்களை வாட்டுகிறது' என பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டினார்.
அவரது அறிக்கை:
அடுத்த ஐந்தாண்டுகளில், மின் கட்டணத்தை 26 சதவீதம் குறைக்க போவதாக, மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் ஏற்கனவே 39.81 சதவீதம், மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க., அரசு, மேலும் 3.16 சதவீதம் உயர்த்த உள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் 42.17 சதவீதம், அதாவது 45,000 கோடி ரூபாய் அளவுக்கு, மின் கட்டணத்தை தி.மு.க., அரசு உயர்த்தி இருக்கிறது.
மஹாராஷ்டிராவில் மின் கட்டண குறைப்புக்கு, நிர்வாகத் திறன்தான் காரணம். ஆனால், தமிழக மின்வாரியத்தில், நிர்வாகத் திறனை பூதக் கண்ணாடி கொண்டு தேட வேண்டி இருக்கிறது.
தமிழகத்தில் 62 சதவீத மின்சாரம் வெளியில் இருந்து வாங்கப்படுவதால், ஏற்படும் இழப்பை ஈடுகட்டவே, மின் கட்டணத்தை உயர்த்தி, தமிழக மக்களை, தி.மு.க., அரசு வாட்டி வதைக்கிறது.
தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும், முதன்மை மாநிலமாக்க போவதாகக் கூறி, ஆட்சிக்கு வந்த தி.மு.க., மக்களை சுரண்டுவதில் முதலிடம் பிடித்துள்ளது.
தி.மு.க.,வின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள், ஒன்று திரண்டு, வரும் தேர்தலில் அக்கட்சிக்கு படுதோல்வியை பரிசாக அளிப்பர். அடுத்து அமையும், பா.ம.க., அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில், மின் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.