பா.ம.க., நிர்வாகிகளுடன் அன்புமணி தொடர் ஆலோசனை மனைவி சவுமியாவை தீவிர அரசியலில் களமிறக்க முடிவு
பா.ம.க., நிர்வாகிகளுடன் அன்புமணி தொடர் ஆலோசனை மனைவி சவுமியாவை தீவிர அரசியலில் களமிறக்க முடிவு
ADDED : ஜன 03, 2025 07:31 PM
சென்னை:தந்தையுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பனையூரில் பா.ம.க., நிர்வாகிகளுடன், அன்புமணி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தனது மனைவி சவுமியாவை, தீவிரமாக அரசியலில் களமிறக்க, அவர் முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த டிச., 28ம் தேதி, புதுச்சேரியில் பா.ம.க., பொதுக்குழு நடந்தது. இதில், பா.ம.க., இளைஞர் அணித் தலைவராக, தனது மகள் வழி பேரன் முகுந்தனை, ராமதாஸ் அறிவித்தார். அதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவிக்க, தந்தை -- மகன் இடையிலான மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. அதே மேடையில், சென்னை அடுத்த பனையூரில், கட்சி அலுவலகம் துவங்கி இருப்பதாகவும், நிர்வாகிகள் அங்கு வந்து தன்னை சந்திக்கலாம் எனவும், அன்புமணி அறிவித்தார்.
அதன்படி, புத்தாண்டு முதல், பனையூரில் பா.ம.க., மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்தி வருகிறார். மூன்றாவது நாளாக நேற்றும் ஆலோசனை தொடர்ந்தது. மாவட்ட வாரியாக, கட்சியின் செயல்பாடுகள், கடந்த லோக்சபா தேர்தல் பணிகள் குறித்த விபரங்களை, அன்புமணி கேட்டறிந்துள்ளார். மேலும் வரும், 2026ல் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், இந்த ஆண்டு முழுக்க கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து, பா.ம.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
பா.ம.க., தலைவராகி, இரண்டரை ஆண்டுகளான போதிலும், இப்போதுதான் அன்புமணி, தனக்கென தனி அலுவலகம் அமைத்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திப்பதை, ராமதாஸ் வழக்கமாக வைத்துள்ளார். இனி பனையூரில் தினமும் நிர்வாகிகள், தொண்டர்களை, அன்புமணி சந்திப்பார்.
அன்புமணியின் எதிர்ப்பையும் மீறி, குடும்பத்தில் இன்னொரு நபருக்கு, கட்சியில் முக்கிய பொறுப்பை, ராமதாஸ் கொடுத்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த அன்பமணி, கட்சியை தன்னுடைய முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தீவிரமாக களப்பணியாற்ற முடிவு செய்து, அதற்கானப் பணியை துவக்கி உள்ளார். மேலும், கடந்த லோக்சபா தேர்தலில் பேட்டியிட்ட, மனைவி சவுமியாவை, தீவிர அரசியலில் களமிறக்கவும் அன்புமணி முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, சவுமியா தலைமையில் போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தவும், அதில் சவுமியா கலந்து கொள்ளவும் முழுமையான ஏற்பாட்டை செய்து கொடுத்தவர் அன்புமணி.
அரசியல் ரீதியில் பல்வேறு திட்டங்களை தீட்டி வைத்திருக்கும் அன்புமணி, திட்டங்களை வேகமாக செயல்படுத்துவதன் வாயிலாக, கட்சியை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் என நினைக்கிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

