அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு அன்புமணி குற்றச்சாட்டு
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : ஏப் 24, 2025 09:07 PM
சென்னை:'தமிழக அரசு பள்ளிகளில், எப்போதும் இல்லாத அளவுக்கு, மாணவர் சேர்க்கை சரிந்துள்ளது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் உள்ள, 31,336 அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில், 2025 - -26ல், 5 லட்சம் மாணவர்களை சேர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால். மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக, 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஒரு பள்ளிக்கு சராசரியாக 4.78 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளிகளில், தங்களின் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. பள்ளிகளில் சேர தகுதியான மாணவர்கள் அனைவரும், பள்ளிகளில் சேர்க்கப்பட்டு விட்ட நிலையில், இனி எவரும் அரசு பள்ளிகளில் சேர வாய்ப்பில்லை. அண்மைக் காலங்களில், அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, நடப்பாண்டில் தான் மிகவும் குறைவாக இருக்கும் என, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் செயல்பட்டு வரும், 31,336 பள்ளிகளில் 25.50 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 81 பேர் மட்டும் படிக்கின்றனர். அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள 4,498 தனியார் பள்ளிகளில், 30.60 லட்சம் மாணவர்கள், அதாவது ஒவ்வொரு பள்ளியிலும், சராசரியாக 680 மாணவர்கள் படிக்கின்றனர்.
போதிய கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் இல்லாததால், அரசு பள்ளிகளில் சேர, யாரும் ஆர்வம் காட்டவில்லை. தமிழகத்தில் பெரும்பான்மையான அரசு பள்ளிகள், எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில்தான் உள்ளன. பல பள்ளிகளில், மேற்கூரையின் பூச்சு உதிர்ந்து விழுவது, அன்றாட நிகழ்வாகி விட்டது. எனவே, அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.