ராமதாஸ் குறித்த விமர்சனம் வேண்டாம் கட்சியினருக்கு அன்புமணி வேண்டுகோள்
ராமதாஸ் குறித்த விமர்சனம் வேண்டாம் கட்சியினருக்கு அன்புமணி வேண்டுகோள்
ADDED : செப் 06, 2025 02:58 AM
சென்னை: 'என் தலைமையில்தான் பா.ம.க., இருக்கும். எனவே, நம்பிக்கையுடன் கட்சி பணியைத் தொடருங் கள்' என, பா.மக.., மாவட்டச் செயலர்களுக்கு, அக்கட்சி தலைவர் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார்.
பா.ம.க., மாவட்டச் செயலர்கள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம், சென்னை பனையூரில் நேற்று நடந்தது. அன்புமணி தலைமை யில் நடந்த கூட்டத்தில் பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அன்புமணி மீது, 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ராமதாஸ் தரப்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
அதற்கு அன்புமணி பதிலளிக்க, வரும் 10ம் தேதி வரை ராமதாசால் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மாவட்டச் செயலர்கள் சிலர், 'கட்சியில் உள்ள சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். வெற்றி பெறும் கூட்டணியில் சேர வேண்டும்' என, வலியுறுத்தினர்.
கூட்டத்தில் பேசிய அன்புமணி, 'என் தலைமையிலான பா.ம.க.,வை தான், தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. நம் பக்கமே பா.ம.க., இருக்கும். வரும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை, நான்தான் தேர்வு செய்வேன்.
'எனவே, நம்பிக்கையுடன் கட்சிப் பணியாற்றுங்கள். பா.ம.க., வலுவாக இருக்கும் தொகுதிகளில், 100 சதவீதம் பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும். ராமதாஸ் பற்றி சமூக ஊடகங்களில் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்' என கூறினார்.