ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் 20 ஆண்டில் முன்னேற்றம் வரும் அன்புமணி ஆரூடம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் 20 ஆண்டில் முன்னேற்றம் வரும் அன்புமணி ஆரூடம்
ADDED : நவ 11, 2025 05:25 AM

தர்மபுரி: “நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் தான் வழங்க வேண்டும்,” என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
'உரிமை மீட்க, தலைமுறை காக்க' என்ற பெயரில், 100 நாள் நடைபயணத்தை, கடந்த ஜூலை 25ல் சென்னையை அடுத்த திருப்போரூரில் துவங்கிய அன்புமணி, தர்மபுரியில் நேற்று முன்தினம் நிறைவு செய்தார்.
இதையொட்டி, நடந்த பொதுக்கூட்டத்தில், 'பசுமை தாயகம்' தலைவர் சவுமியா, அன்புமணி ஆதரவு பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
இந்த 100 நாள் நடைபயணம், என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. சில தடைகளால், இந்த பயணம், 108 நாட்களாக மாறியது.
அடுத்த 108 நாள் மிக முக்கியமானது. அதில், தி.மு.க., ஆட்சியை துாக்கி எறிய வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோல்வியடைந்த தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.
சமூக நீதிக்கு எதிரியாக தி.மு.க., உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு வாயிலாக, 50 ஆண்டுகளில் முன்னேற வேண்டிய தமிழகம், 20 ஆண்டில் முன்னேறும். வன்னியர் இட ஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாத முதல்வர் ஸ்டாலின் ஒரு துரோகி.
காவிரி டெல்டாவில் நெல் மூட்டைகளை சேமிப்பதற்கு கிடங்கு இல்லாதது வருத்தமளிக்கிறது. இன்னும் ஐந்து மாதத்தில் நம் ஆட்சி வரும். அதில், முதல் மாதத்தில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.
நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நீர்ப்பாசன திட்டங்கள், மருத்துவக் கல்லுாரிகள் எண்ணிக்கை, அனல்மின் நிலையங்கள், கல்லுாரி உதவி பேராசிரியர்கள் நியமனம், வேலைவாய்ப்பு உட்பட அனைத்திலும் பூஜ்ஜியம் மதிப்பில்தான் தி.மு.க., அரசு உள்ளது. எனவே, இந்த ஆட்சியை துடைத்தெறிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

