ராமதாஸ் நெருக்கடியை சமாளிக்க நடைபயணம் செல்கிறார் அன்புமணி
ராமதாஸ் நெருக்கடியை சமாளிக்க நடைபயணம் செல்கிறார் அன்புமணி
ADDED : ஜூன் 12, 2025 06:44 AM

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாசின் நெருக்கடிகளை சமாளிக்க, அவரது பிறந்த நாளான ஜூலை 25 முதல், நடைபயணம் செல்ல பா.ம.க., தலைவர் அன்புமணி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ம.க.,வில் தந்தை - மகன் இடையிலான மோதலுக்கு முடிவு கட்ட, பல தரப்பிலும் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 5ம் தேதி ராமதாசை, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், அன்புமணி சந்தித்துப் பேசினார்.
பா.ஜ.,வுக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாசை சந்தித்து, பா.ம.க., ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து, சென்னை வந்த ராமதாசை, மீண்டும் குருமூர்த்தி சந்தித்துப் பேசினார். 'விரைவில் நல்ல செய்தி வரும்; முகுந்தன் மீண்டும் கட்சிக்குள் வர வாய்ப்பில்லை' என ராமதாஸ் கூறியதை அடுத்து, தந்தை -- மகன் மோதல் முடிவுக்கு வரும்; சமாதானம் ஏற்படும் என கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், கடந்த 8ம் தேதி சென்னையில் தன் மகள் வழி பேரன் முகுந்தனை அழைத்து ராமதாஸ் பேசிய பின், காட்சிகள் மாறத் துவங்கின. 'எதுவும் நடக்கலாம். முகுந்தன் மீண்டும் கட்சிக்குள் வரவும் வாய்ப்புள்ளது' என்றார் ராமதாஸ்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அன்புமணிக்கு நெருக்கமான வழக்கறிஞர் பாலுவை, கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய ராமதாஸ், அந்த பதவியில் தன் ஆதரவாளரை நியமித்தார். இது அன்புமணியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
'கட்சிப் பொறுப்பில் இருந்து யாராவது நீக்கப்பட்டால், அடுத்த 10 நிமிடங்களில் அவர்கள் அப்பதவியில் தொடர்வதாக அறிவிப்பு வெளியாகும்' என, தன் ஆதரவாளர்களுக்கு அன்புமணி உறுதி அளித்திருந்தார். பா.ம.க., பொருளாளர் திலகபாமா மற்றும் மாவட்டச் செயலர்கள் சிலர் நீக்கப்பட்டபோது, அவர்கள் பதவிகள் தொடர்பாக அறிவித்த அன்புமணி, அதன் பின் நடந்த நிர்வாகிகள் நீக்கத்தை கண்டும் காணாமல் இருக்கிறார்.
இப்படி ராமதாசை சமாளிக்க முடியாமல் திணறும் அன்புமணி, தந்தைக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, ராமதாஸ் பிறந்த நாளான வரும் ஜூலை 25 முதல், நடைபயணம் செல்ல முடிவு செய்திருப்பதாக பா.ம.க.,வினர் தெரிவித்தனர். மாவட்ட வாரியாக நடத்த திட்டமிட்டுள்ள பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், அன்புமணி, நடைபயணம் செல்ல உள்ளார்.

