பா.ம.க., தொடர் தோல்விக்கு அன்புமணியே காரணம்: எம்.எல்.ஏ., அருள் விளாசல்
பா.ம.க., தொடர் தோல்விக்கு அன்புமணியே காரணம்: எம்.எல்.ஏ., அருள் விளாசல்
UPDATED : ஜூன் 30, 2025 07:10 AM
ADDED : ஜூன் 30, 2025 03:17 AM

சேலம் : ''அன்புமணி தலைமையில் பா.ம.க., 15 ஆண்டுகளாக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால், வரும் 2026 தேர்தலில் ராமதாஸ் வெற்றி கூட்டணி அமைப்பார்,'' என, சேலம் எம்.எல்.ஏ., அருள் கூறினார்.
பா.ம.க.,வின் ராமதாஸ் அணியைச் சேர்ந்த சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், சேலத்தில் நேற்று அளித்த பேட்டி:
பா.ம.க.,வில் நிலவும் குழப்பத்தை தொடர்ந்து, நேற்று முன்தினம் அன்புமணி, கட்சியின் நிறுவன தலைவர் ராமாதாசின் செயல்பாடுகளை முழுமையாக விமர்சித்துள்ளார். மூத்த தலைவரான ராமதாஸை ஒரு குழந்தை என விமர்சித்துள்ளார். இது நியாயமல்ல.
ஐந்தாண்டு காலமாக ஒரு குழந்தை போல ராமதாஸ், மூவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து செயல்படுகிறார் எனவும் அன்புமணி கூறியுள்ளார். அவர் ஐந்தாண்டுகளாக அப்படி செயல்பட்டிருந்தால், அன்புமணியை கட்சியின் தலைவராக எப்படி மூன்றாண்டுகளுக்கு முன் நியமித்திருப்பார்?
ராமதாசால் உருவான கட்சி பா.ம.க., அதற்காக தாய் போல் 45 ஆண்டுகளாக உழைத்து கொண்டிருக்கிறார். தனி சிந்தனையோடு, 96,000 கிராமங்களில் கட்சியை வளர்த்த ராமதாசை, அன்புமணி விமர்சித்திருப்பது வேதனையாக உள்ளது.
கட்சி தலைவராக பேராசிரியர் தீரன், ஜி.கே.மணி இருந்தபோது, நிறுவனர் ராமதாஸ் கட்டுப்பாட்டில் கட்சி இருந்தது. அதேபோல இப்போதும் இருப்பதை எப்படி மாற்ற முடியும்? ராமதாசுடன் இருப்பவர்களை விமர்சிக்க, இணையத்தில் ஒரு கூட்டமே உள்ளது.
மூன்று தீய சக்திகள் ஆட்டி படைப்பதாக கூறும் அன்புமணியை, வழி நடத்தும் சக்திகளை எங்களாலும் பட்டியலிட முடியும். இப்படியே தொடர்ந்தால், நாளைக்கு தலைவர்கள் ஒன்று சேர்ந்தாலும், அவர்களை போல தொண்டர்களின் மனநிலை மாறிவிடாது. உயிரோடு இருக்கும் வரை நான் தான் தலைவரென ராமதாஸ் கூறுவது அவரது உரிமை.
தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்து அன்புமணி பேச வேண்டும். ராமதாசே, அன்புமணியை தலைவராக ஏற்கும் வரை, அன்புமணி பொறுமையாக இருக்க வேண்டும்.
கட்சியில் ராமதாஸ் நியமித்த நிர்வாகிகள் கொலை, கொள்ளைக்காரர்கள் என்கிறார் அன்புமணி. இலந்தை பழம் விற்றாலும், நாங்களும் பாட்டாளிகள் தான். ராமதாசை பார்த்து அரசியலுக்கு வந்த நாங்கள், அவருக்கு இழிவு ஏற்படும்போது வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது.
அன்புமணி தலைமையில், 15 ஆண்டுகளாக தேர்தலில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறோம். எனவே, வரும் 2026 சட்டசபை தேர்தலில், ராமதாஸ் வெற்றி கூட்டணி அமைப்பார்.
அன்புமணியுடன் மாவட்ட நிர்வாகிகள் இருந்தாலும், ஓட்டு போடும் பாட்டாளிகள் ராமதாஸ் பக்கம் தான் உள்ளனர். எனவே, ராமதாஸ் தியாகத்துடன் அன்புமணியை ஒப்பிட முடியாது. அன்புமணி ஆதரவாளர்களால், ராமதாசுடன் இருப்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.