திருவிடந்தை ஆன்மிக மையம் அமைக்க அன்புமணி எதிர்ப்பு
திருவிடந்தை ஆன்மிக மையம் அமைக்க அன்புமணி எதிர்ப்பு
ADDED : நவ 26, 2024 06:54 PM
சென்னை:'திருவிடந்தையில் ஆன்மிக, கலாசார மையம் அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, திருவிடந்தை அருகே 233 ஏக்கரில், ஆன்மிகம் மற்றும் கலாசார மையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஆன்மிக மையம் அமைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறையும், சுற்றுலாத் துறையும் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
ஆன்மிக மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை, மீனவர்கள் தங்களின் படகுகளை நிறுத்துவது, வலைகள், மீன்களை காய வைப்பது போன்றவற்றுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு ஆன்மிக மையம் அமைக்கப்பட்டால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
ஆன்மிக மையம் அமைய உள்ள இடத்திற்கு அருகில், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் இயற்கையான மணல் மேடுகள் உள்ளன. அவை சுனாமி அலைகளைகூட தடுக்கும் வல்லமை பெற்றவை. ஆகவே, வலுக்கட்டாயமாக ஆன்மிகம் மற்றும் கலாசார மையம் அமைக்கப்பட்டால், சிறப்பு வாய்ந்த இந்த இடமும் சேர்ந்து பாதிக்கப்படும்.
இயற்கையையும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து விட்டு, ஆன்மிக, கலாசார மையம் அமைக்க வேண்டுமா என, அரசு சிந்திக்க வேண்டும். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.