பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்; நாளை மறுநாள் செயற்குழு: ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்; நாளை மறுநாள் செயற்குழு: ராமதாஸ் அறிவிப்பு
ADDED : ஜூலை 06, 2025 02:37 AM

சென்னை: பா.ம.க., நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டு, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அமைத்து உள்ளார்.
பா.ம.க.,வில் ராமதாஸ் -- அன்புமணி மோதல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இருவரும் போட்டி போட்டு நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகின்றனர்.
பா.ம.க., பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைவர் அன்புமணி பக்கம் உள்ளனர்.
இதனால், அவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை ராமதாஸ் நியமித்துள்ளார்; 50-க்கும் அதிகமான மாவட்டச் செயலர்களையும் அவர் மாற்றியுள்ளார். இந்நிலையில், பா.ம.க.,வில் அதிகாரமிக்க அமைப்பான, 19 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை கலைத்து, 21 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழுவை ராமதாஸ் அமைத்துள்ளார்.
அதில், பா.ம.க., தலைவர் அன்புமணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, செய்தி தொடர்பாளர் பாலு, அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் மீண்டும் இடம்பெறவில்லை.
புதிய நிர்வாகக் குழுவில், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, ராமதாசால் நியமிக்கப்பட்ட பொதுச்செயலர் முரளிசங்கர், பொருளாளர் சையத் மன்சூர், முன்னாள் மாநில தலைவர் தீரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
புதிய நிர்வாகக் குழு கூட்டம், திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று ராமதாஸ் தலைமையில் நடந்தது. பூம்புகாரில் நடக்கவுள்ள மகளிர் மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ''அன்புமணியை யாரும் விமர்சிக்க வேண்டாம். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்சி பொறுப்பு நிரந்தரமானது. கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துங்கள். வரும் 8ம் தேதி, திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துாரில், பா.ம.க., செயற்குழு கூட்டம் நடக்கும்,'' என்றார்.
தற்போது முதற்கட்டமாக கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தியிருக்கும் ராமதாஸ், நாளை மறுதினம் செயற்குழு கூட்டத்தை நடத்திவிட்டு, அதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுக் குழுவையும் கூட்ட திட்டமிட்டுள்ளார்.
இதன் பின், பா.ம.க., வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும்; கட்சியில் அன்புமணியின் நிலைப்பாடு உள்ளிட்டவற்றை ராமதாஸ் திட்டவட்டமாக அறிவிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
ராமதாசின் நிர்வாகக் குழு மாற்ற அறிவிப்பை தொடர்ந்து, தங்கள் ஆதரவாளர்களை கொண்டு, புதிய நிர்வாகக் குழுவை அமைக்க அன்புமணியும் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.