பச்சை பொய் மட்டுமே தி.மு.க., அரசின் முதலீடு: அன்புமணி கடும் விமர்சனம்
பச்சை பொய் மட்டுமே தி.மு.க., அரசின் முதலீடு: அன்புமணி கடும் விமர்சனம்
ADDED : ஆக 31, 2025 04:18 AM

சென்னை : 'தி.மு.க., அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில், 10 சதவீதம் கூட நடைமுறைக்கு வரவில்லை; பச்சை பொய் மட்டும் தான் தி.மு.க., அரசின் முதலீடு' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தொழில் முதலீடுகளை ஈர்க்கப் போவதாக கூறிக்கொண்டு, ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் ஒன்பது நாள் சுற்றுலா சென்றுள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், 'தி.மு.க., ஆட்சியில் 10.63 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
'இதன் வழியே, 32 லட்சத்து 81,032 பேருக்கு வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது' என, கூறியுள்ளார். அனைத்துமே அப்பட்டமான பொய்.
கடந்த 2024ல் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், டாடா பவர் நிறுவனம், 70,800 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டது. ஆனால், அந்த நிறுவனம் இதுவரை 3,800 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்துள்ளது.
இது தவிர, அதானி குழுமம் உறுதியளித்த 42,768 கோடி, ஜே.எஸ்.டபிள்யு., உறுதியளித்த 12,000 கோடி, ஹுண்டாய் உறுதியளித்த 6,180 கோடி ரூபாய் ஆகியவற்றில் ஒரு பைசா கூட இதுவரை வரவில்லை.
அதேபோல், 16,000 கோடி முதலீடு செய்வதாக உறுதியளித்த வின்பாஸ்ட் நிறுவனம், 4,000 கோடி ரூபாயில் துாத்துக்குடியில் கார் ஆலை அமைத்துள்ளது.
மேலும், 37,538 கோடி ரூபாய் முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனம், பசுமை அமோனியா ஆலைக்கு, துாத்துக்குடியில் அடிக்கல் நாட்டியது. மற்ற நிறுவனங்கள் குறித்து, எந்த விபரங்களையும் வெளியிட தி.மு.க., அரசு மறுக்கிறது.
தி.மு.க., அரசின் முதலீட்டு ஒப்பந்தங்கள் அனைத்தும் இந்த லட்சணத்தில் இருக்கும்போது, அனைத்து ஒப்பந்தங்களுமே நடைமுறைக்கு வந்து விட்டதாக, மனசாட்சியே இல்லாமல் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். பச்சை பொய் மட்டுமே தி.மு.க., அரசின் முதலீடு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.