மது பாட்டிலில் எச்சரிக்கை வாசகம் அச்சிட அன்புமணி வலியுறுத்தல்
மது பாட்டிலில் எச்சரிக்கை வாசகம் அச்சிட அன்புமணி வலியுறுத்தல்
ADDED : ஜன 04, 2025 08:07 PM
சென்னை:'மது பாட்டிலில் எச்சரிக்கை வாசகங்கள், படங்கள் அச்சிட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
மது அருந்துவதால் குறைந்தது ஏழு வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுப் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும், அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி அலுவலகம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை, அமெரிக்காவில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் இதே கருத்தை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பா.ம.க., வலியுறுத்தி வருகிறது. அமெரிக்காவை ஒப்பிடும்போது, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் பல மடங்கு தரம் குறைந்தவை. தமிழகத்தில் மது குடிப்போர், அதிக அளவிலும் குடிக்கின்றனர்.
இதனால், தமிழகத்தில் மது அருந்துபவர்களுக்கு இரண்டு ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, மது குடித்தால் புற்றுநோய் உள்ளிட்ட, 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தையும், எச்சரிக்கைப் படத்தையும் மது பாட்டில்களில் அச்சிடும் முறையை, தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

