டில்லி சென்றார் அன்புமணி அமித் ஷாவை சந்திக்க திட்டம்?
டில்லி சென்றார் அன்புமணி அமித் ஷாவை சந்திக்க திட்டம்?
ADDED : ஜூன் 30, 2025 02:32 AM

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி, நேற்று திடீர் பயணமாக, டில்லி புறப்பட்டு சென்றார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையிலான மோதல், உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால், கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக உள்ள, கட்சி நிர்வாகிகளை, ராமதாஸ் நீக்க, அவர்கள் தொடர்வர் என, அன்புமணி அறிவிக்க, தினமும் அறிக்கை போர் தொடர்கிறது.
ராமதாஸ் ஆதரவாளராக உள்ள, எம்.எல்.ஏ., அருள், அன்புமணியை நேற்று கடுமையாக விமர்சித்தார். பதினைந்து ஆண்டுகளாக கட்சி தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. அதற்கு காரணமே அன்புமணி தான் என்று வெளிப்படையாக கருத்து கூறினார்.
'கட்சியில் நிறுவனர் ராமதாசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது' என, அன்புமணி கூற, அவரை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டேன் என, ராமதாஸ் அறிவிக்க, கட்சி நிர்வாகிகள், தந்தை பக்கம் செல்வதா, மகன் பக்கம் செல்வதா என, கடுமையான குழப்பத்தில் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அன்புமணி நேற்று மாலை டில்லி புறப்பட்டு சென்றார். அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்திக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அடுத்து என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சியில் அக்கட்சியினர் உள்ளனர்.