UPDATED : ஜூலை 11, 2025 06:08 PM
ADDED : ஜூலை 11, 2025 02:20 AM
சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இல்லாதபோது, தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற பா.ம.க., தலைவர் அன்புமணி, தன் தாய் சரஸ்வதியை சந்தித்துப் பேசினார்.
பா.ம.க.,வில் அப்பா -- மகன் மோதல் நாளுக்கு நாள் முற்றி வரும் நிலையில், கும்பகோணத்தில் நேற்று நடந்த பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸ் சென்றிருந்தார்.
இந்நிலையில், திருமண விழா ஒன்றில் பங்கேற்க, நேற்று திண்டிவனம் சென்ற அன்புமணி, திடீரென தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று, அங்கு, தன் தாய் சரஸ்வதியை சந்தித்துப் பேசினார். அப்போது, ராமதாஸ் அங்கு இல்லை.
தனக்கு எதிராக தொடர்ந்து ராமதாஸ் செயல்பட்டு வருவது பற்றியும், தன் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என கூறியது குறித்தும், வேதனையை அன்புமணி வெளிப்படுத்தியதாகவும், அவரது தாய் சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த 8ம் தேதி, திண்டிவனம் அருகே ஓமந்துாரில் ராமதாஸ் நடத்திய செயற்குழு கூட்டத்தில், பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சென்னையில் நேற்று அன்புமணி நடத்திய நடைபயணம் குறித்த ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார்.
இரண்டே நாளில், அவர் அணி மாறியது, பா.ம.க.,வுக்குள் பரபரப்பாக பேசப்படுகிறது.

