ராமதாசிடம் நலம் விசாரித்த முதல்வர்; அப்பாவை பார்க்காமல் சென்ற அன்புமணி
ராமதாசிடம் நலம் விசாரித்த முதல்வர்; அப்பாவை பார்க்காமல் சென்ற அன்புமணி
ADDED : அக் 07, 2025 06:30 AM

சென்னை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாசை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால், ராமதாசின் மகனும் பா.ம.க., தலைவருமான அன்புமணி, டாக்டர்களிடம் மட்டும் பேசிவிட்டு, அப்பாவை பார்க்காமல் சென்றார்.
இதய பிரச்னையால், சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில், ராமதாஸ், 86, நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 'பா.ம.க., தலைவர் ராமதாசை, இதய சிகிச்சை நிபுணர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். ஓரிரு நாட்களில், அவர் வீடு திரும்புவார்' என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு நேற்று சென்று, ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதற்கிடையே, ராமதாசை பார்க்க மருத்துவமனைக்கு, அவரது மகனும், பா.ம.க., தலைவருமான அன்புமணி நேற்று சென்றார். ஆனால், அப்பாவை பார்க்காமல், டாக்டர்களிடம் மட்டும் விசாரித்து விட்டு திரும்பினார். எனினும், அங்கிருந்த தன் அம்மா சரஸ்வதியை, அன்புமணி சந்தித்தார்.
பின்னர், அன்புமணி கூறுகையில், “ராமதாசுக்கு, 'கார்டியோ ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக உள்ளதாகவும், எந்த பிரச்னையும் இல்லை எனவும், இதய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
''தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால், அவரை நேரில் பார்க்க முடியவில்லை; டாக்டரிடம் தான் பேசினேன்,” என்றார்.
ராமதாஸ் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் தான், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்த வைகோ குடும்பத்தினரை சந்தித்து, வைகோ உடல்நலம் குறித்து விசாரித்தார்.